தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்கியது :


Posted by-Kalki Teamதிருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டதையும் காணலாம்

கடலூர் அடுத்த திருவந்தி புரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் நித்திய உற்சவர் தேவநாதசுவாமி, பல்லக்கில் எழுந்தருளி புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், நேற்று பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.இதையொட்டி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

பின்னர் விசேஷ பூஜைகளுக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமி கொடி மரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற் றது. இதன்பின்னர் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து காலை சாமி வீதியுலா நடைபெற்றது. இரவு அம்ச வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.

இன்று(புதன்கிழமை) காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) காலை யாளி வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை தங்க விமானத்தில் வேணுகோபாலன் அலங்காரத்திலும், இரவு சேஷ வாகனத்திலும், 6-ந்தேதி காலையில் தங்கப்பல்லக்கில் நாச்சியார் அலங்காரத்திலும் சாமி வீதியுலா நடைபெறும்.

பின்னர் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளும் தேவநாதசுவாமி மறுநாள்(7-ந்தேதி) காலை வரையிலும் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார். மாலையில் மஞ்சள் நீர் வசந்த உற்சவமும், இரவு யானை வாகனத்திலும், 8-ந்தேதி வெண்ணெய் தாழி உற்சவமும், இரவு மகாமேரு தெருவடைச்சான் உற்சவமும், 9-ந்தேதி காலை பேட்டை உற்சவமும், இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் சாமி வீதியுலா நடைபெறும்.

பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 10-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தேவநாதசுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள்வார். இதன்பின்னர் தேரோட்டம் நடைபெறும்.

இதைதொடர்ந்து தீர்த்தவாரியும், மாலையில் மதுர கவி ஆழ்வார் உற்சவ சாற்றுமுறையும், இரவு பானக பூஜையும் நடைபெறும். பின்னர், பிரம்மோற்சவ கொடி இறக்கப்படும். 11-ந்தேதி காலையில் மட்டையடி உற்சவமும், தங்கப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவும் இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Post Comment

Post Comment