கன்னூர் காடுகளில் ஆதிவாசிகளிடம் சிக்கிய "பாகுபலி"!


Posted by-Kalki Teamகன்னூர்:

பாகுபலி படத்தின் 2ம் பாகத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் கன்னூரில் இப்படக் குழுவினருக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள ஆதிவாசி மக்கள் தங்களது பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டனர். மேலும் படப்பிடிப்பையும் அவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.

கன்னூர் மாவட்டத்தில்தான் இந்த சிக்கலைச் சந்தித்துள்ளது பாகுபலி படக் குழு. மேலும் ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த கேரள அரசு அனுமதி அளித்தது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதிவாசிகள் :

கேரளாவின் மலைப் பகுதிகளில் பூர்வீக ஆதிவாசிகள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு ரூபத்தில் ஏற்கனவே பல சிக்கல்கள் உள்ளன.

சட்டத்தைக் காட்டி ஒடுக்கப்படும் ஆதிவாசிகள் :

சுற்றுச்சூழல் விதிகளையும், சட்டத்தையும் காட்டி ஆதிவாசி மக்களை அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து அகற்ற முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்துள்ளன.

படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி ஏன் :

இந்த நிலையில்தான் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் பாகுபலி படக் குழுவினருக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இது ஆதிவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

பணம் முக்கியம்.. நாங்க முக்கியமில்லை :

இதுகுறித்து ஆதிவாசி சமூகத்தினர் கூறுகையில் கேரள அரசுக்கு பூர்வீக குடிகளாக நாங்கள் முக்கியமில்லை. பணத்தைத் தரும் சினிமாக்காரர்கள்தான் பெரிதாகி விட்டார்கள். நாங்கள் பாகுபலி படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.

குழப்பத்தில் பாகுபலி :

பாகுபலி படக் குழுவினரை உடனடியாக திரும்பிப் போகுமாறு ஆதிவாசி அமைப்பினர் கூறி விட்டனார். இதனால் எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்று தெரியாமல் படக்குழுவினர் குழம்பிப் போயிருப்பதாக கூறப்படுகிறது.

வளர்ச்சிக்கு வழியில்லை :

ஆதிவாசி சமுதாயத்தினர் மேலும் கூறுகையில் எங்களது பகுதியை மேம்படுத்த அரசு முன்வருவதில்லை. கேட்டால் சட்டத்தைக் காரணம் காட்டுகிறது. ஆனால் இப்போது லட்சக்கணக்கில் பாகுபலி குழுவினர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு எங்களது பகுதிகளை அழிக்க அனுமதிக்கிறார்கள் என்று குமுறினர்.Post Comment

Post Comment