கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள் :


Posted by-Kalki Teamகாற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம், பூஞ்சை காளான் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கோடைகாலத்தில் நாம் அதிகமாக சித்தெடிக் ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பம் கூடுதலாகும். சாதாரணமாகவே காற்று உள்புகாத சித்தெடிக் ஆடைகள் கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான வெளிப்புற காற்றை சருமத்திற்கு தராமல் அதிக வியர்வை, துர்நாற்றம், பூஞ்சை காளான் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் நல்ல காற்றோட்டம் தரக்கூடிய பருத்தி ஆடைகள், லினன் மற்றும் மஸ்லின் ஆடைகள் அணிவது மிகுந்த நல்ல பலனை தரும்.

கோடைகாலத்தில் பெரும்பாலும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் தற்போது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் மூலிகை சாயம் ஏற்றப்பட்ட ஆடைகள் வருகின்றன. அதுபோல், பெண்கள் அணியக்கூடிய சேலைகள் பருத்தி மற்றும் மூங்கிலிழை, கற்றாழை நார், வாழைநார் போன்றவைகளில் கூட கிடைக்கின்றன. இவை சித்தெடிக் மற்றும் இரசாயன துணி வகைகளை விட அதிக பலன்களை தரக்கூடியது. கோடைகாலம் தொடங்கியவுடனே அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஆடைகளில் மாற்றம் செய்திட வேண்டியது அவசியமாகிறது.

பரவசமூட்டும் பருத்தி ஆடைகள் :

பருத்தி ஆடைகள் உடலுக்கு அணியும் போது ஓர் பரவசமூட்டும் சூழலை ஏற்படுத்துகிறது. உடலுடன் ஒட்டி பிணைந்து குளிர்ச்சியான சூழலையும், அதிக வியர்வை ஏற்படுத்தாதவாறும், வியர்வை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. தற்போது பருத்தி ஆடைகளில் இயற்கை பருத்தி ஆடைகள், மூலிகை சாய பருத்தி ஆடைகள், கதர் ஆடைகள் மற்றும் பல வண்ண டிசைன்களுடன் கூடிய பருத்தி ஆடைகள் கிடைக்கின்றன.

இவை அனைத்தும் கோடைகாலத்தில் ஆண், பெண் இருபாலரும் அணிய கூடியவாறு நவீன ஆடை வகைகளாக கிடைக்கின்றன. பருத்தியிலான தளர்வான சட்டைகள், டீ- சர்ட்டுகள், குர்தா போன்றவைகளும் பருத்தியிலான பேண்ட்டுகளும் கிடைக்கின்றன.

பெண்கள் அணிகின்ற ஆடைகள் எனும்போது சேலைகள், சல்வார்கமீஸ், நீளமான பாவாடைகள், கவுன் மற்றும் தளர்வான பேண்ட்கள் போன்றவை கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்ற பருத்தி ஆடை என்றவாறு பிராக், கவுன், சட்டை, பனியன், டர்வுசர் கிடைக்கின்றன.

அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற லினன் சட்டைகள் :

லினன் என்பதும் இயற்கையான செடி தண்டுகளின் நார்களிலிருந்து நெய்யப்படும் துணி வகைதான். இதனை அணியும் போது மென்மை தன்மையும், மெத்தென்ற உணர்வும் ஏற்படும். இதுவும் வியர்வையை உள் இழுத்து கொள்ளும் தன்மை கொண்டது. அதுபோல் கோடைகாலத்தில் அணியும்போது சருமத்திற்கு தேவையான காற்றை உள் செல்ல அனுமதிக்கும் துணிவகை. எனவே தற்போது அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்றவாறு விதவிதமான பார்மல், கேஸ்வல் லினன் சட்டைகள் வருகின்றன.

குளுகுளு வசதிகொண்ட மஸ்லின் சட்டைகள் :

முந்தைய நாளில் மிக பிரபலமாக இருந்த மஸ்லின் ஆடைகள் தற்போது மீண்டும் விற்பனைக்கு வருகின்றன. மஸ்லின் என்பது மிக மிக மெல்லிய துணி வகை. எடை குறைவானது. ஒரு முழு புடவையையே ஒரு மோதிரத்தில் நுழைத்து வெளியே எடுக்கக்கூடிய அளவு மெல்லிய துணி வகை.

பிரத்யேகமான பருத்தி நூலால் நெய்யப்படும் இந்த மஸ்லின் சட்டைகள், ஆடைகள் ஏர்கண்டிஷன் ஆடைகள் என்றே அழைக்கப்பட்டன. இவை கோடைகாலத்தில் அணிய ஏற்ற சட்டைகள் என்பதுடன் பெரிய கெளரவம் தரும் ஆடை வகையாகவும் உள்ளது.


Post Comment

Post Comment