சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது :


Posted by-Kalki Teamதிருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலின் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 8-ம் நாள் நாளான நேற்று காலை அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை அபிஷேகம் கண்டருளி, மரக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது. இதில் காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார். தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள சக்தி நகர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுச்சந்தை நடைபெறும் இடத்திலும் சமயபுரம் நால்ரோட்டில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுகின்றனர். ச.கண்ணனூர் பேரூராட்சியின் சார்பாக பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சியின் செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து 19-ந் தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 20-ந் தேதி இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 21-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து, மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Post Comment

Post Comment