ஷீரடிக்கு பயணிகள் விமானம் அடுத்த மாதம் தொடங்குகிறது :


Posted by-Kalki Teamமுக்கிய நகரங்களில் இருந்து மராட்டியம் மாநிலத்தில் உள்ள ஷீரடிக்கு பயணிகள் விமான போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.

மராட்டிய மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது. நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஷீரடி சென்று தரிசனம் செய்கிறார்கள்.

பெரும்பாலான பக்தர்கள் ரெயில், பஸ்கள் மூலம் ஷீரடி செல்கிறார்கள். விமானத்திலும் பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஷீரடியில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதில் 2,500 மீட்டர் தொலைவுக்கு ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரே நேரத்தில் பல விமானங்கள் வந்து செல்வதற்கு போதுமானதாக இல்லை என்பதால் ஓடு பாதை ரூ.40 கோடி செலவில் 2,500 மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது கோடை விடுமுறை என்பதாலும், அக்டோபர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஷீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு விழா நடக்க இருப்பதாலும் அடுத்த மாதம் (மே) முதல் ஷீரடியில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கும், பின்னர் மேலும் பல இடங்களுக்கும் இயக்கப்படும். தொடர்ந்து வெளி நாடுகளுக்கு விமான சேவையும் தொடங்கப்படும் என்று மராட்டிய விமான வளர்ச்சி கம்பெனி நிறுவன தலைவர் விஸ்வாஸ் எம்.பட்டீல் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஷீரடி விமான நிலையத்தில் இருந்து 4 அல்லது 5 விமானங்கள் புறப்படுவது மற்றும் இறங்குவதற்கு வசதியாக விரிவு படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் விமான போக்குவரத்து தொடங்கப்படும்.

சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரடியாக விமானத்தில் வந்து செல்வதற்கு வசதியாக இது அமையும். தொடர்ந்து சர்வதேச நாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.


Post Comment

Post Comment