ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் :


Posted by-Kalki Teamஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் கோவிந்தா, ரெங்கா கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவிந்தா, ரெங்கா, கோஷத்துடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கிழக்கு சித்திரவீதியில் நம்பெருமாள் வலம் வந்த போது எடுத்தபடம்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நம்பெருமாள், தாயாருடன் சேர்ந்து காட்சியளிக்கும் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நம்பெருமாள், தாயாருடன் சேர்ந்து இருந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தாயார் சன்னதியில் இருந்து நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி தேனிக்கிண்ண பல்லக்கில் புறப்பட்டு கிழக்கு சித்திர வீதியில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேருக்கு வந்தடைந்தார். அங்கு பட்டர்கள் பாராயண பாடல்கள் பாட சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதன்பின் காலை 10.20 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடனும், ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடனும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னால் பெண்கள், பெருமாள் பாடல்களை பாடி கும்மியடித்து நடனமாடி சென்றனர்.

தேர் மேல சித்திர வீதி, வடக்கு சித்திர வீதி வழியாக பகல் 1.45 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

கோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இன்று மாலை 3 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, வாகன மண்டபத்தை வந்தடைகிறார். இன்று இரவு 7.30 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் சித்திர வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்தை மீண்டும் வந்தடைகிறார். பின்னர் இரவு 9 மணிக்கு மூலஸ் தானம் சென்றடைகிறார்.


Post Comment

Post Comment