வாழை நார் புடவை!


Posted by-Kalki Teamசென்னை அனகாபுத்தூருக்கு ஒரு வரலாறு உண்டு. பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் இங்கு நெசவு செய்து வருகிறார்கள். இங்கு கையால் நெய்யப்பட்ட புடவைக்கும், லுங்கி, சட்டைக்கும் உலகெங்கும் ஏக கிராக்கி. இந்தப் பெயரை தக்கவைக்கவும், உலகமயமாக்கலை எதிர்கொள்ளவும் 53 வயதாகும் சேகர் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதுதான் வாழைநார் புடவைகள்!மூணு தலைமுறைகளா இந்தத் தொழிலை செய்யறோம். நெசவு, நூல், தரி, வண்ணங்களோடதான் நான் வளர்ந்தேன். 13 வயசுல நானும் நெசவு செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்ப பருத்திலதான் செய்துட்டு இருந்தோம். தொழிலும் நல்லா போயிட்டு இருந்தது. எங்க உடைகளை நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்தோம். அங்க திடீர்னு ராணுவ ஆட்சி வந்ததால எங்களால தொடர்ந்து எக்ஸ்போர்ட் செய்ய முடியலை.

பருத்தியை நெய்துகிட்டே சில்க், காட்டன் பக்கம் மாறினோம். அந்த சமயத்துல புத்தகத்துல நான் படிச்ச ஒரு விஷயம் என்னை அப்படியே கட்டிப் போட்டது. அது ராமாயணம். சீதையை கடத்திட்டு போய் அசோகவனத்துல சிறை வைக்கிறான் ராவணன். சீதைகிட்ட மாற்றுத் துணியில்லை. ராவணன்கிட்ட துணி கேட்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்த சீதை அங்க இருந்த வாழை நாரை நெய்து புடவையா உடுத்தறாங்க.இதை படிச்சதுலேந்து என்னால தூங்க முடியலை. எந்நேரமும் இதைப் பத்தின சிந்தனைதான். வாழை நார்ல உடை நெய்ய முடியுமா? இந்தக் கேள்வி துரத்திகிட்டே இருந்தது... சுவாரஸ்யத்துடன் பேச ஆரம்பிக்கும் சேகர், இதன்பிறகு கோயில் திருவிழா, கல்யாணங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் வாழை மரங்களை கீறிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

நூல் மாதிரி வாழை நாரை மாத்த முடியுமானு யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, சரியான வழி கிடைக்காம திண்டாடினேன். இதுக்கு இடையில சணல்ல புடவையும், கைவினைப் பொருட்களும் செய்ய ஆரம்பிச்சோம். ஆனா, தொழில் போட்டி பலமா இருந்ததால போதுமான லாபம் கிடைக்கலை. குழப்பமான மனநிலைல இருந்தப்ப கோயில்பட்டிலேந்து கலைக்கல்லூரி மாணவர்கள் எங்களை சந்திக்க வந்தாங்க.அவங்களுக்காக வாழை நார்ல புடவை தயாரிக்கிற என் எண்ணத்துக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினேன். நல்ல ரிசல்ட் கிடைச்சது... என்ற சேகர் இதன் பிறகு முழுமூச்சுடன் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பக்காவா வாழை நாரிலிருந்து நூல் எடுக்க முடிஞ்சது கூட பெரிய விஷயமில்லை. எல்லா நாடுகள்லயும் வாழை விளையுதே... அதுதான் முக்கியம்.

ஆனா, நாரிலிருந்து நூல் எடுக்கறது சுலபமில்லை. கத்தியால அதைக் கீறி நார்களை பிரிச்சு எடுக்கணும். அப்புறம் அதை சுத்தி வைக்கணும். பிறகு நமக்குத் தேவையான சாயத்துல அதை நனைக்கணும். கடைசியா தறியில சேர்த்து நெய்யணும். இயற்கை முறைல தயாராகிற வண்ணங்களைத்தான் நாங்க பயன்படுத்தறோம். இண்டிகோ நீலம், கருப்பு, சிவப்பு, மஞ்சள், டெரகோட்டா... எல்லாமே கெமிக்கல் கலக்காதது.வாழை நாரோட பருத்தி, பட்டு, கற்றாழை, அன்னாசிப்பழ இலை நார்... இப்படி எல்லா இயற்கை நூல்களையும் இணைச்சுதான் இந்தப் புடவையை நெய்யறோம். ஒரு புடவையை நெய்ய சுமாரா 500 கிராம் நார் தேவை. ஆனா, ஒரு வாழை மரத்துலேந்து 150 கிராம் நார்தான் எடுக்க முடியும். அதனாலதான் மற்ற இயற்கை நார்களையும் உடன் கலக்கறோம்.

வெறும் வாழை நாரிலிருந்தே புடவை நெய்ய இப்ப முயற்சி செய்துட்டு வர்றோம். பெரிய நூல் கண்டா வாழை நாரை சுத்தற அளவுக்கு அதை பக்காவா நூலாக்கும் ஸ்பெஷல் கருவியை இப்ப எங்களுக்காக அஞ்சு பொறியியல் மாணவர்கள் தயாரிச்சுட்டு வர்றாங்க. இது சக்சஸ் ஆனதும் முழுக்க முழுக்க வாழை நார் புடவை விற்பனைக்கு வந்துடும்... என்று சொல்லும் சேகர், மலைவாழ் மக்களிடமிருந்து வாழை மரங்களைப் பெறுகிறார்.ஜவ்வாது மலைல வசிக்கிற பழங்குடியின மக்களிடமிருந்துதான் வாழை மட்டைகளை வாங்கறோம். அவங்க இயற்கை முறைலதான் விவசாயம் செய்யறாங்க. அதனால பட்டையிலிருந்து எடுக்கப்படும் நாரால எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதே மாதிரி மலைல கிடைக்கிற இயற்கை சாயத்தைதான் பயன்படுத்தறோம். பாரம்பரிய டிசைன்லதான் நெய்யறோம்.

சிலர் விரும்பிக் கேட்பாங்க. அப்ப அவங்க கேட்கிற டிசைனுக்கு நெய்து தருவோம்... என்ற சேகரிடம் தொழில் கற்க வெளிநாட்டு மாணவர்கள் மற்றும், உள்ளூர் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்களும் வருகிறார்கள். புடவை தவிர சட்டைகளையும் நெய்து தரும் இவர், விரைவில் ஸ்பெஷல் ஃபேஷன் ஷோ நடத்தப் போகிறார்!பட்டுப்புடவையை எப்படி பராமரிக்கிறோமோ அப்படிதான் இந்த வாழை நார் புடவைகளையும் பாதுகாக்கணும். ஆர்கானிக் கலர்ஸை பயன்படுத்தறதால சாயம் போகாது. சாதாரணமா கைல துவைச்சா போதும். 25 வருஷங்களுக்கு முன்னாடி 5 ஆயிரம் தறி இங்க இருந்தது. இப்ப 300 கூட இல்ல. குடிசைத் தொழிலா, அடிப்படை வசதிகள் இல்லாமதான் இப்பவும் இயங்கறோம்.இப்பவும் இந்தத் தொழிலை 99% பெண்கள்தான் செய்யறாங்க. அரசு எங்களுக்கு கருணை காட்டினா நிச்சயமா நாங்க முன்னேறுவோம்... என்று சொல்லும் சேகர் தயாரித்த ஒரு புடவைக்கு லிம்கா சாதனை விருது கிடைத்திருக்கிறது. இகோ ஃப்ரெண்ட்லி விருதும் பெற்றிருக்கிறார். சேகரின் அடுத்த டார்கெட், வாழை நாரில் ஜீன்ஸ்! கலக்குங்க பாஸ்!


Post Comment

Post Comment