கேரளாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகா பயிற்சி பெறும் கிராமம் :


Posted by-Kalki Teamசர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் மாதம் 21-ந்தேதி கொண்டாடப்படுவதால், கேரளாவில் குன்னம்தானம் கிராமத்தில் கிராம மக்கள் அனைவரும் இணைந்து யோகா முகாம் நடத்த உள்ளனர்.

கேரளாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகா பயிற்சி பெறும் கிராமம்

குன்னம்தானம் கிராமத்தில் உள்ள புனித மேரி ஆலயத்தில் யோகா பயிற்சி நடந்தபோது எடுத்த படம்.

இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராதாகிருஷ்ண குரூப். ஆரோக்கியமாக வாழ பண்டைய வாழ்க்கை முறையே சிறந்தது என்று கிராம மக்களுக்கு கூறி வந்தார். இதற்காக சுகாதார திட்டங்களை அறிமுகம் செய்தார்.

குறிப்பாக யோகா பயிற்சி மூலம் மனிதனின் சுகாதாரம், ஆரோக்கியம் மேம்படும் என்பதை கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதற்காக எனது கிராமம், சுகாதார கிராமம் என்ற திட்டத்தை தொடங்கினார்.

பிரணவம் யோகா சென்டர் அமைப்புடன் இணைந்து கிராம மக்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். இதில் தன்னார்வலர்கள் பலரும் ஆர்வமுடன் இணைந்தனர். இவர்கள் மூலம் கிராம மக்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றால் ஆரோக்கியமாக வாழலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள 15 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் மூலம் ஆலயங்கள், கோவில்கள், பொது அரங்குகளில் பயிற்சி நடந்தது. பாதிரியார்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதுபற்றி பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ண குரூப் கூறியதாவது:-

கிராமம் முழுவதும் முதல் கட்ட பயிற்சி நடந்து வருகிறது. 28 இடங்களில் நடைபெறும் யோகா வகுப்புகள் மே மாதம் 31-ந்தேதி வரை நடைபெறும்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் யோகாவும் ஒரு அங்கம் என்பதை பொது மக்களுக்கு எடுத்து கூறி உள்ளோம். அவர்களும் அதனை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் யோகா பயிற்சியில் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

யோகா பயிற்சி அளிக்கும் பிரணவம் யோகா மைய இயக்குனர் திலீப் கூறியதாவது:-

குன்னம்தானம் கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் யோகா பயிற்சி அளித்து வருகிறோம். இங்குள்ள புனித மேரி ஆர்த்தோடக்ஸ் ஆலயத்தில் உள்ள அரங்கில்தான் முதல் பயிற்சி முகாம் நடந்தது. இதில் பாதிரியார் குரியன் கலந்து கொண்டார். அவரைப் போல கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் யோகா பயிற்சி பெற்று வருகிறார்கள்.

சர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் மாதம் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று குன்னம்தானம் கிராமத்தில் கிராம மக்கள் அனைவரும் இணைந்து பங்கேற்கும் மெகா யோகா முகாம் நடத்த உள்ளோம்.

இதன் மூலம் குன்னம் தானம் கிராமம் முழுமையாக யோகா பயிற்சி பெற்ற கிராமம் என்பதை தேசிய அளவில் நிரூபிப்போம். அவ்வாறு நிரூபிப்பதின் மூலம் எங்கள் கிராமம்தான் தேசிய அளவில் முழுமையாக யோகா பயிற்சி பெற்ற முதல் கிராமம் என்ற பெருமையும், பாராட்டும், விருதும் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஜூன் 21-ந் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.


Post Comment

Post Comment