சிறுதானிய இட்லி வேணுமா? சைதாப்பேட்டைக்கு வாங்க...


Posted by-Kalki Teamகுடிநீரையே காசு கொடுத்து வாங்கும்போது, இவ்வளவு பெரிய மாநகரில், நல்ல பாரம்பரிய உணவுக்கு எங்கே போவது என்கிறீர்களா? சைதாப்பேட்டை, தபால் நிலையத்திற்கு எதிரில், செயல்படும் தாய்வழி இயற்கை உணவகம் அதற்கு பதில் சொல்கிறது. அந்த உணவகத்தை மகாலிங்கம், ரவி என்ற நண்பர்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் பேசியதில் இருந்து...

* இயற்கை உணவகம் ஆரம்பிக்கணும்ங்கற எண்ணம் எப்படி வந்தது?

மகாலிங்கம்: ஆறு மாசத்துக்கும் முன்னாடி வரைக்கும், நான் காரசாரமா, அசைவ உணவு தயாரிச்சு, செட்டிநாடு டிபன் சென்டர்ங்கற பேருல நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன். ஏழு வருஷமா அந்த தொழில்ல இருந்தாலும், சமீப காலமா ஏதோ மனக்குறை. சின்ன வயசுலேயே பலபேருக்கு வியாதி வர்றதுக்கு காரணம், பாஸ்ட்புட் மாதிரியான உணவுகள்தான்னு தெரிஞ்ச பிறகு, மனசு கஷ்டமாய் இருந்துச்சு. அந்த கால கட்டத்துலதான், நான் யோகா கத்துக்க ஆரம்பிச்சேன். அப்போ, யோகா வகுப்புல சொன்ன இயற்கை உணவுகள்ல இருக்கிற சத்துக்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டதும், நாமும் அப்படித்தான் செய்யணும்னு முடிவெடுத்தேன். அந்த நேரத்துலதான், சிவகாசியில, மாறன்ஜிங்கறவர், இயற்கை உணவகம் நடத்துறதா செய்தி பார்த்தேன். அவர்கிட்டே போய்தான், இந்த தொழில்நுட்பங்களை தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட கடைக்கு பக்கத்துல, பாஸ்ட்புட் கடை வைச்சிருந்த ரவிகிட்டேயும் சொன்னேன். அவரும் ஆர்வமா வந்தார்.

* என்னென்ன உணவுகள் இருக்கு?

மகாலிங்கம்: நம்மகிட்ட ரெண்டு கடைகள் இருக்கு. ஒண்ணு, முழு நேர மூலிகைச் சாறு கடை; இன்னொண்ணு, இரவு நேர சிற்றுண்டி கடை. மூலிகை சாறு கடையில, முடக்கத்தான், நெல்லி, அருகம்புல், வாழைத் தண்டு, கறிவேப்பிலை, கீழாநெல்லி, மணத்தக்காளி சாறுகளைக் கொடுக்கிறோம். 200 மி.லி., அளவுள்ள சாற்றை, தேங்காய் கொட்டாங்கச்சி (சிரட்டை)யில கொடுக்கிறோம். இதோட விலை, 20 ரூபாய். ஆனா... பயன் நிறைய. வயசானவங்களுக்கு வர்ற மூட்டு வலி, முடக்கு வலி எல்லாம், முடக்கத்தான் சாறு குடிச்சா சரியாயிடும்.

ரவி: முளை கட்டிய தானியங்கள் கொடுக்கிறோம். இந்த உணவுல இருக்கிற புரதம், எட்டு முட்டையில கிடைக்கிற சத்துக்கு சமம்.

வெறும் சாறும், பயிறும் தானா?

மகாலிங்கம்: தேன்நெல்லி, தேன்அத்தி, தேன்வில்வம், தேன்கடுக்காய் ஆகிய, மருத்துவ குணமுள்ள, இனிப்புகளும் உண்டு.

ரவி: சூப் கூட இருக்கு. தூதுவளை, முடக்கத்தான், கொள்ளு, முருங்கைக்காய், வெந்தயக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற, சூப்புகளும் உண்டு.

இன்னொரு கடையில என்னவெல்லாம் இருக்கு?

ரவி: அது, இரவுநேர சிற்றுண்டி கடை. அதுல, மூலிகை தோசை, சிறுதானிய இட்லி கிடைக்கும். தோசையில, முடக்கத்தான், தூதுவளை, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், பாகற்காய் எல்லாம் கிடைக்கும்.

மகாலிங்கம்: இந்த சிற்றுண்டிக்கு, வதக்காம அரைச்ச, தேங்காய், மல்லி, புதினா, தக்காளி, கறிவேப்பிலை, வெந்தயம், கேரட் போன்ற சட்னிகளை கொடுக்கிறோம். முருங்கை, செம்பருத்தி, ரோஜா, தாமரை, ஆவாரம், வேம்பு உள்ளிட்ட பூக்கள்ல, தினமும் சாம்பார் வைக்கிறோம். இவ்வளவு ஆர்வமா, இயற்கை உணவகத்தை ஆரம்பிச்சிட்டீங்களே, வியாபாரம் எப்படி இருக்கு?

மகாலிங்கம்: முன்னாடி, ரொம்ப குறைவாதான் இருக்கும். ஆனாலும், நம்பிக்கையை விடாம நடத்திக்கிட்டு வர்றோம். இப்போ, நிறைய பேர் தொடர்ந்து வந்து, கேட்டு வாங்கி சாப்பிடுறாங்க.

ரவி: எங்களை மாதிரி இயற்கை உணவை வளர்க்கணும்னு பிரியப்படுறவங்க, எங்களோட உணவகத்தை நடத்தறதுக்கு, குறைவான வாடகையில இடம் கொடுத்தாங்கன்னா, இன்னும் நல்லா செய்வோம். Thanks Dinamalar.Post Comment

Post Comment