நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து 90 நாட்களில் செய்தது என்ன? பொன்வண்ணன் பேட்டி! :


Posted by-Kalki Teamநடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து பதவிக்கு வந்த பிறகு தாங்கள் செய்த சாதனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளார் நடிகரும் சங்க துணைத் தலைவருமான பொன் வண்ணன் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:

நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9​0​ நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை நினைவுகூர்ந்து பார்த்தால் இந்த 90 நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம்.

பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த, நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர்செய்துள்ளோம். சென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

அது பல நிறுவனங்களிலும், ஏ.ஆர்.ஓ எனப்படும் நியமன பொறுப்பாளர்களிடமும் நிலுவையில் இருந்தது. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம்.

நாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற்குழு நடத்தியுள்ளோம். மூன்று செயற்குழுவிலும் அனைத்தும் முறைப்படி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்கள் 2,500 -பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை நாங்கள் அனுப்பிவைத்தோம். அந்த மிகப்பெரிய வேலையை நமது , செயற்குழு உறுப்பினர்களும் , நடிகர்களும் வெளி மாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கிவந்தனர்.

தீபாவளி முடிந்த ஒருவார இடைவேளையில் மழையினுடைய வெளிப்பாடு தீவிரம் அடைந்து கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டது. சென்னையும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சங்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாள் நிவாரண பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டது.

அது முடிவடைந்தவுடன் தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து இடைவேளை ஏதும் இல்லாமல் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குருதட்சணை திட்டம் எனப்படும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். குருதட்சனை திட்டம் என்றால் ஒரு செயலை செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும் குருவுக்கு தட்சணை வைத்து நாம் அவருக்கு செலுத்தும் முதல் மரியாதைக்கு பெயர் தான் குருதட்சணை. குருதட்சனை திட்டத்தால் பயன் அடைபவர்கள் இரண்டு வகைப்படுவர். அதில் ஒரு வகை வசதிபடைத்தவர்கள் நடிகர் சங்கத்துக்கு குருதட்சணையாக செய்வது. மற்றொன்று வசதி இல்லாதவர்களுக்கு குருதட்சணையாக நடிகர் சங்கம் செய்வது என்று இருவகைப்படுகிறது. இப்படி இரண்டு விதமான தன்மையில் இந்த குருதட்சனை திட்டம் உள்ளது.

நடிகர் சங்கத்தில் சென்னையில் மட்டும் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். அதே போல் வெளியூரில் 1000 உறுப்பினர்கள் உள்ளனர் இதுபோக வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற பிரிவில் நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படி எல்லாம் சேர்த்து 2750 பேர் உள்ளனர். இந்த உறுப்பினர் கணக்கெடுப்பை சென்னையில் இருந்து ஆரம்பிக்க முடிவெடுத்தோம். முதலாவதாக சென்னையில் 7 நாளாக இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தோம்.

ஒரு நாளைக்கு 250 என்று பிரித்து, ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்தோம். பகுதி வாரியாக 250 பேரை பிரித்து அவர்களுக்கு எந்த தேதியில் எங்கே வரவேண்டும் என்ற விவரத்தோடு கடிதம் எழுதி அனுப்பி, பின்னர் அப்பகுதிகளுக்கு சென்று குருதட்சனை திட்டத்தின் கீழ் அவர்களை சந்தித்தோம். இந்த நிகழ்வை துவக்கி வைத்து சிறப்பித்தவர் எங்களுடைய மூத்த கலைஞர் நடிகர் சிவகுமார் அவர்களும் சச்சு அம்மா, மேனகா ஆகியோர்.

நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அந்த இடத்தில்தான் நாங்கள் இந்நிகழ்வை துவக்கினோம். நிகழ்ச்சிக்கு வந்த நடிகர்களில் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 50ல் இருந்து 75 பேருக்கு இந்த கண்ணாடியை நாங்கள் வழங்கியுள்ளோம்.

நாடக கலைஞர்களையும் திரைப்பட நடிகர்களையும் ஒன்றாக்கி ஒரு நாடகத்தை நடத்த உள்ளோம். இது எதிர்கால திட்டமாக எடுத்துள்ளோம். சென்னையில் இருக்க கூடிய பெரிய நடிகர்களுக்கு விண்ணப்பங்களை அவரவர் பிஆர்ஓ மூலமாக அனுப்ப உள்ளோம்.Post Comment

Post Comment