தனுஷ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா ;


Posted by-Kalki Teamராணா நடிப்பில் காஸி படம் திரைக்கு வந்துள்ள நிலையில், தனுஷ் படம் ஒன்றில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறினார். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு, இயக்குநர் கவுதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

முன்னதாக இப்படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும் தர்புகி சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்நிலையில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. எனினும் படக்குழு இதனை உறுதி செய்யாத நிலையில், நடிகர் ராணா தான் இப்படத்தில் ஒரு நிமிட காட்சியில் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக 30 நிமிடங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்ததாகவும் ராணா கூறினார்.

முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரே விடிவி படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்தார். அதேபோல் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நானீ சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பின்னர் அவரே நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்திருந்தார். இந்நிலையில், ராணா ஒரு நிமிட காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

ராணா நடிப்பில் நேற்று வெளியான காஸி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக ராணா நடிப்பில் பாகுபலி 2 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment