ரிங்ஸ் :


Posted by-Kalki Teamநடிகர் ஜானி காலெக்கி

நடிகை ஐமீ டீகார்டென்

இயக்குனர் ஜேவியர் குடியெர்ரேஸ்

இசை மத்தியூ மார்கெசன்

ஓளிப்பதிவு ஷரோன் மேயர்

விமர்சிக்க விருப்பமா?

ரிங்ஸ் என்ற வீடியோவை பார்த்தவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு இது ஒரு சாபமாக ஆகிவிடுகிறது. இந்த சாபத்தில் இருந்து அவர்கள் விடுபடவேண்டுமென்றால், அந்த வீடியோவை பார்த்தவர் ஒரு காப்பி எடுத்து, அதை இன்னொருவரை பார்க்க வைக்க வேண்டும். இதுதான் படத்தின் கதைக்கரு.

படத்தோட நாயகன் ஜானி காலெக்கியும், ஏமி தெக்கார்டியனும் நெருங்கிய காதலர்கள். இந்நிலையில், ஒருநாள் ஜானி படிப்பதற்காக ஏமியை பிரிந்து வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கு சென்ற நிலையிலும், தினமும் தனது காதலியிடம் ஜானி வீடியோ மூலம் பேசிக் கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், ஜானி படிக்கும் ஊரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அவருக்கு ரிங்ஸ் சம்பந்தமான வீடியோ ஒன்று கிடைக்கிறது. அந்த வீடியோவால் அவர் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து அவர் தப்பிப்பதற்காக ஒவ்வொரு காப்பியாக எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் ஜானியும் சிக்கிவிடுகிறார். இதன்பின்னர், தன்னுடன் தொடர்பில்லாமல் இருக்கும் ஜானியை தேடி ஏமி வருகிறாள்.

இறுதியில், அவள் தனது காதலனை கண்டுபிடித்தாளா? தனது காதலனை பிடித்திருக்கும் சாபத்திலிருந்து அவனை மீட்டாளா? என்பதே மீதிக்கதை.

ஏற்கெனவே, இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இந்த பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் திரில்லை கொடுக்காவிட்டாலும், ஒன்றிரண்டு காட்சிகள் கண்டிப்பாக திரில்லை கொடுத்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

தனது காதலனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்குவதற்காக ஹீரோயின் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு டுவிஸ்டுகள் அவிழ்க்கப்படும். அந்த காட்சிகள் எல்லாம் ரொம்பவும் சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கும். படத்தின் கதாநாயகன், கதாநாயகியை பொறுத்தவரை ரெண்டு பேரும் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேயை பார்த்து நடுங்கும்போது நமக்கும் பயம் வருகிறது.

மேலும், இந்த படத்தில் கிராபிக்ஸ் பணிகள் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டியவை. பேய் வரும் காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கியிருந்தாலும், அதை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பது சிறப்பு. டிவியில் இருந்து பேய் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை உண்மையிலேயே நடுநடுங்க வைத்திருக்கிறார்கள்.

ஷாரோயின் மியரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரொம்பவும் தத்ரூபமாக படமாகியிருக்கின்றன. ஒவ்வொரு இடத்தில் இவருடைய ஒளிப்பதிவு கிராபிக்ஸையும் தாண்டி படமாகியிருப்பது சிறப்பு. மாத்தேவ் மார்கேசன் பின்னணி இசை படத்திற்கு மேலும் திரில்லிங்கை கொடுத்திருக்கிறது. படத்தில் இருக்கும் சிறிய பொருளில் வரும் சத்தத்தை வைத்தே நமக்கு திரில் கொடுக்கும் வித்தையை கற்று வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ரிங்ஸ் பயமுறுத்துகிறது.


Post Comment

Post Comment