சமயபுரம் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்:


Posted by-Kalki Teamதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் தங்க விமானங்களில் புனித நீர் ஊற்றுவதை படத்தில் காணலாம்.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்களுக்கு வேண்டும் அருளும் தெய்வமாகவும், நோய் தீர்க்கும் அம்மனாகவும் அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்து சமய ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களை கொண்ட சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் நலன் கருதி கோவிலில் விரிவாக்க பணிகள் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அரசு நிதி மற்றும் பக்தர்கள் நன்கொடை சேர்த்து ரூ.30 கோடி செலவில் கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக அனைத்து பிரகாரங்கள், முன்புற மண்டபங்கள் விரிவுபடுத்தப்பட்டன. மேலும் வடக்கு, தெற்கு கோபுரங்களுக்கு புதிய வாசல்கள் அமைக்கப்பட்டன.

மேலும் அம்மனின் திருமேனிவர்ணகலாபம் செய்யப்பட்டது. விநாயகர் சன்னதி இடமாற்றம் செய்யப்பட்டு கன்னி மூலையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மாரியம்மன் மூலஸ்தானம் பாலாலயம் செய்யப்பட்டு கருவறையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து பிப்ரவரி 6-ந்தேதி (இன்று) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கோவி லில் வாசலில் 17 வேதிகைகள் மற்றும் 51 யாக குண்டங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு முதல் கால யாக சாலை பூஜைகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அடுத்த நாள் காலை மற்றும் மாலை வேளைகளில் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. நேற்று காலை 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

இன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை கள் தொடங்கி த்ரவ்யா ஹூதி, 5.30 மணிக்கு பரிவார பூர்ணாஹூதி, 5.45 மணிக்கு பிரதானம் பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது.

காலை 6 மணிக்கு யாத்ரா தானம் கடங்கள் புறப்பட்டன. சரியாக காலை 7.10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், நூதன ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார விமானங்கள், மூலவர், மேற்கு, வடக்கு, தெற்கு வாசல் கோபுரங்கள், விநாயகர், உற்சவர் அம்பாள் சன்னதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் சிவஸ்ரீராஜா பட்டர், திருவானைக்காவல் சந்திர சேகர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி பரவசத்துடன் கோ‌ஷம் எழுப்பினர்.

கோவில் அர்ச்சகர்கள் கணேசன், பிச்சை, சுவாமிநாத சிவம், மகாதேவன் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து பைப் மூலம் பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை ஐ கோர்ட்டு நீதிபதி ராமகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இந்து சமய அற நிலையத்துறை இயக்கு னர் வீரசண்முகமணி, இணை செயலாளர் கவிதா, கோவில் இணை ஆணையர் க.தென்னரசு, பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ., தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.க.பாண்டியன் மற்றும் அரசியல் கட்சியினர், முக் கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்றக்குழு தலைவராக நேற்று சென்னையில் நடந்த எம். எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி சசிகலா சார்பில் பட்டுப்புடவையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோவில் இணை ஆணையர் தென்னரசுவிடம் வழங்கினார்.

விழாவையொட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதி கள் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் கண்ணனூர் பேரூ ராட்சி சார்பில் செய்து தரப் பட்டிருந்தது.

மேலும் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.


Post Comment

Post Comment