சப்த புரி - காசி


Posted by-Kalki Teamஒரு அதிசய ஒளி இருக்கிறதாம். அது தான் ஒளிவீசுவது மட்டுமல்ல, தன்னைச் சேருவோர் யாவரையும் ஒளிவீசச் செய்கிறதாம்! அந்தப் பேரொளி தான் காசி மாநகரம் என்று ஸ்ரீ சங்கர பகவத்பாதர் கூறுகிறார். அனைவருக்கும் பேரொளி பரப்பும் காசிகா நகரை "ப்ரகாசிகா" என்றல்லவா குறிக்க வேண்டும் என்று அழகாகக் கூறுகிறார். பௌதீக நிலையில் ஒரு நகராக இருக்கின்ற காசியே அத்யாத்மிக நிலையில் ஞானாத்ம பேரொளியாக இருக்கிறது என்று போற்றுகிறார், தன் காசி பஞ்சக ஸ்தோத்திரத்திலே.

காசியே நம் நாட்டின் மிகப் புராதனமான நகரம். காசியே நம் சனாதன தர்மத்தின் தலைநகரம். வாரணாசி என்றும் அவிமுக்தகம், ஆனந்தகணணம், மஹா ச்மஸானம், பிரம்மவர்த்தம், சுதர்சனம், ரம்யம் என்றும் வேறு பெயர்களாலும் வழங்கப் படுகிறது.

ஸப்த மோக்ஷ புரிகளுள் காசி ஒன்று.

இந்த ஸப்த புரிகளும் குண்டலினீ மார்க்கத்தில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிக்கின்றன. காசியே அவற்றுள் புருவ மத்தியில் உள்ளதான ஆக்ஞா சக்கரம். ஞானப் பேரொளியாகக் காசியை ஆச்சார்யாள் குறிப்பது மிகப் பொருத்தமே!

பண்டைக் காலத்தில் நம் தென்னகத்தில் காஞ்சியைப் போன்று காசி கல்விக்கு நிலைக்களனாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எந்தப் பண்டிதரும் எந்தச் சித்தாந்த கர்த்தாவும் தங்கள் படைப்பினை அல்லது கோட்பாட்டைக் காசியில் தான் அரங்கேற்றுவார்கள். காசி மாநகரப் பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டால் அது பாரதமே ஏற்றுக் கொண்டதைப் போலே! பின் அது பாரதமெங்கும் பரவிவிடும்.

காசியில் இறக்க முக்தி என்பார்கள். காசியில் மரிக்கும் உயிரினங்களின் காதிலே ஐயன் விச்வநாதன் தாரக மந்திரத்தை ஓதிப் பிறவாப் பெருவாழ்வை அருளுகிறான்.

காசியின் பெருமைக்கு முக்கிய காரணம் அங்கு பாவங்களைப் போக்கும் பாவனியான கங்கை உத்தரவாஹினியாகப் பாய்வது தான்!

வருணா, அசி எனும் இரு நதிகள் கங்கையின் இடப்புறம் பாய்ந்து இந்நகரை வளையம் போல் சுற்றிக் கொள்வதால் இது வாரணாசி எனும் பெயர் பெறுகிறது. இம்மூன்று நதிகளின் கரைகளில் அமைந்துள்ள தீர்த்தக் கட்டங்கள் புகழ்பெற்றவை, புண்ணியம் அருள்பவை. மொத்தம் 81 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. அவற்றில் தசாச்வமேத கட்டம், அஸ்ஸி கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகியன புகழ்பெற்றவை.

ரிக்வேதம் காசியைச் சிவன் ஸதா வதியும் நகரமாக வர்ணிக்கிறது. பாண்டவர்கள் குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு இங்கு வந்து தங்கள் தோஷங்கள் நீங்குவதற்காக விச்வநாதரைத் துதித்தார்கள். அதற்கு முன்னும் காசிக்கு அவர்கள் உற்சவங்காண வந்திருந்தபோது தான் துரியோதனன் அரக்கு மாளிகையில் தீவைத்து அவர்களைக் கொல்ல முயன்றான். விச்வநாதர் அருளால் அவர்கள் அந்தச் சதியிலிருந்து தப்பினார்கள். மேலும் தேவீ பாகவதத்திலும் மற்ற பல புராணங்களிலும் காசியின் பெருமை பரக்கப் பேசப்படுகிறது.

இங்கு விச்வநாதராலயம், அன்னபூரணி கோயில், பிந்து மாதவர் ஆலயம், ஆஞ்சநேயர் ஆலயம், பைரவர் ஆலயம், துர்க்கை ஆலயம் என்று 23000 ஆலயங்களாக்கும் இருக்கின்றன!

இங்கு மஹாசிவராத்திரி விசேஷம். மகேச்வரன் மிருத்யுஞ்சயர் ஆலயத்திலிருந்து விச்வநாதர் ஆலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் கங்கா ஆரத்தியும் பிரசித்தம்.

காஶ்யா ஹி காஶ்யதே காஶீ காஶீ ஸர்வப்ரகாஶிகா |

ஸா காஶீ விதிதா யேன தேன ப்ராப்தா ஹி காஶிகா ||


Post Comment

Post Comment