தமிழ்நாட்டின் பேக்வாட்டர் பூலோக சொர்க்கம் பிச்சாவரம் போட்டிங் டூர்!


Posted by-Kalki Teamபிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த பெயரே பின்னர் பிச்சாவரம் என்று மருவியது.

இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர்.

இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது இந்த பிச்சாவரம் காடுகள்தான். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் இலைகளின் வழியாக ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்ட நெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், நீல வானம், அதில் பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்... தூரத்தில் வங்கக்கடலின் ஆர்ப்பரிப்பு, இப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில் காட்சிகள் தான் இவை.

பிச்சாவரம் சிறந்த சுற்றுலாத் தலம், கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில் மிகு மாங்குரோவ் காடுகளின் ஊடே செல்லும் சிறு சிறு நீர்வழிப்பாதைகள் மூலம் படகில் சுற்றிப் பார்த்து மகிழும் வகையில் இந்த சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் இரு இடங்களில் தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில், இவ்வகையான மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன.

இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன. பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை.

செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பார்க்கும்போது பிச்சாவரம் தில்லைவனக் காடுகள் சுமார் 1100 ஹெக்டேரில் நீலக்கடலில் பச்சை மாமலை பவளச் செங்கண் மேனியனான திருமால் ஆனந்தமாய்ச் சயனித்திருப்பது போலப் பரந்து விரிந்த தோற்றம் தருகிறது.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையச் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பிச்சாவரத்தில் உள்ள ‘அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில்’ படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையை ஒட்டியுள்ள இப்பகுதியில் பல கிலோ மீட்டர் வரை மோட்டார் படகில் சென்று இயற்கை எழிலை உற்சாகமாக அனுபவிக்கலாம். பிச்சாவரம் வனச்சுற்றுலா மையமாக விளங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் 18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளன. இங்கு திகழும் ரம்மியமான சூழலை குடும்பத்தோடு படகுச் சவாரி செய்து ரசித்து அனுபவிப்பது என்பது சொர்கலோக இன்பத்துக்குச் சமானமாக இருக்கும் என முன்பே பலமுறை இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.

சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் காட்சி மிக அற்புதமானது. இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரம் படகுத் துறைப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.

எப்படிச் செல்வது பிச்சாவரத்துக்கு?

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

உணவு வசதி:

வனப் பகுதியின் நுழைவுப் பகுதியில் உள்ள படகுத் துறையில் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. பிச்சாவரம் வனப் பகுதி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது

தங்குமிடம்:

ற்று வசதியாக தங்க: சாரதாராம் ஈகோ ரிஸார்ட் (Saradharam Eco Resort ) உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 04144-238739


Post Comment

Post Comment