ஹார்ட்டிகல்ச்சர் - பாறைத்தோட்டம் :


Posted by-Kalki Teamமலைநாட்டுக் கரும்பாறை மேலே... தலைகாட்டும் சிறு பூவைப் போலே... பொல்லாத இளம் காதல் பூத்ததடா... என ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘மனம் விரும்புதே உன்னை...’ பாடலில் சில வரிகள் வரும். பாறைக்குள் பூ பூப்பது என்பது அப்படித்தான் அரிதான, அழகான, அபூர்வமான விஷயம். பாறைப் பாங்கான இடத்தில் தோட்டம் அமைப்பதை ஆங்கிலத்தில் ‘ராக் கார்டன்’ என்கிறோம். இங்கே கள்ளிச் செடிகள்தான் நிறைய வளரும். அவற்றைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். பொட்டானிகல் கார்டன் போன்ற பெரிய தோட்டங்களிலும் ஏதாவது ஒரு பகுதியில் இது இருக்கும். தோட்டம் என்றால் பூக்களும் செடிகளும் கொடிகளும்தானே? இப்போது ஏன் கள்ளிச் செடிகளை பற்றிப் பேச வேண்டும்?

மனிதர்களில் பல்வேறு மனநிலை கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரிவினரின் மனத்தில் என்ன இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. அவர்களை எவ்வளவு தட்டிப் பார்த்தாலும் அவர்களது ஆழ்மனத்தில் உள்ளது தெரியாது. மனத்தளவில் திடமாக இருப்பார்கள். அதைத்தான் இந்தப் பாறைத் தோட்டங்கள் பிரதிபலிக்கின்றன. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். பாறையிலிருந்தும் செடிகள் வளர்கின்றன. பெரிய பெரிய மலைகளில் மரம், செடி, கொடிகளைப் பார்க்கிறோம்.அவற்றுக்கெல்லாம் யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள்? மண்ணின் அளவு குறைவாக இருக்கும் இந்த இடங்களில் செடிகள் எப்படித் தாக்குப்பிடித்து வளர்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் பாறைத் தோட்டங்கள். பாறைத் தோட்டங்களை பல விதங்களில் அமைக்கலாம். இவற்றை மிக எளிய வடிவில் வீட்டுத் தோட்டங்களுக்கு உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு மணல்மேடு அமைக்க வேண்டும்.

மலை அல்லது குன்றின் வடிவம் எப்படி இருக்குமோ அந்தளவுக்கு மணல் போட வேண்டும். இதில் ஆற்று மணலின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். கொஞ்சம் செம்மண், ஈரம் கலந்த கலவையாக இருக்க வேண்டும். மணல் வைத்து ஒரு மணல் மேடு, பீச் மணலில் கோபுரம் கட்டுவது போல ஆற்று மணலில் ஒரு வடிவம் கொடுக்க வேண்டும்.இந்த வடிவம் கொடுத்த பிறகு இயற்கையான பாறைகள், பெரிய பெரிய கற்களை ஆங்காங்கே பதிய வைக்க வேண்டும். பாறைகள் கிடைக்காதவர்கள் அவற்றைப் போலவே காட்சியளிக்கிற ஃபேப்ரிகேட்டட் மோல்டுகள் கிடைக்கும், அவற்றைப் பயன்படுத்தலாம். இதில் நீர்வீழ்ச்சி அமைக்க வேண்டும். இரண்டு பக்க பாறைகளின் இடையில் நீர்வீழ்ச்சி அமைத்து ஒரு ஓடை போலவும் அமைக்கலாம். தண்ணீர் தோட்டத்துக்குப் பார்த்ததுபோல மேலே மலையும் கீழே தண்ணீர் செடிகளும் இருப்பது மாதிரி அமைக்கலாம்.

சில நேரங்களில் பாறைகள் உருண்டு போகாமலிருக்க சிமென்டில் ஒரு தடுப்பு கொடுப்பார்கள். இல்லை என்றால் சுண்ணாம்புக் கலவையில் ஒரு தடுப்பு கொடுக்க வேண்டி வரும். இதற்கென வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடலாம். பாறைப்பாங்கான இடத்தில் வைப்பதற்கு பாலைவனத்தில் வளரக்கூடிய செடிகளே சிறந்தவை. அவற்றை Succulents என்கிறோம்.சப்பாத்திக் கள்ளி, Mammillaria எனப்படுகிற உருண்டையான கள்ளி, நாகதாலி எனப்படுகிற சான்சிவிரியா போன்றவை அழகாக இருக்கும். இவற்றைப் பாறைகளுக்கு நடுவில் இருந்து வருவதைப் போல வைக்கலாம். மரங்கள் மாதிரி அமைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஆல, அரச மர வகைகளில் கூட சில உண்டு. கள்ளிச் செடிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை, அதிலும் குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும். வேர்ப் பகுதியில் பட்டால் போதும். எக்காரணம் கொண்டும் நீர்த்தெளிப்பான்களை உபயோகிக்காதீர்கள்.

அவற்றை உபயோகித்தால் தண்ணீர் தேங்கி, அழுகக்கூடும். இவற்றுக்கு உரம் தேவையில்லை, பராமரிப்பும் குறைவு. சண்டிகரில் ராக் கார்டன் என்றே ஒன்று உள்ளது. அது மிகப் பிரமாண்டமாக இருக்கும். அதே பாறைத் தோட்ட அமைப்பை வீட்டுக்கு வெளியேவும் செய்யலாம். வீட்டுக்கு உள்ளே மோல்ட் மாதிரி அமைத்து சூரிய ஒளி படும்படியான இடத்திலும் வைக்கலாம்.வீட்டுக்குள் அதற்கு இடம் இல்லை என்றால் அதையும்விட சிறியதாக 2 அடிக்கு 2 என்ற அளவுள்ள இடத்திலோ அல்லது கிணற்றுக்குப் போடும் சிறிய உறையிலோ மண் நிரப்பி, அதில் கூழாங்கற்கள் போட்டு அதிலிருந்து ஆங்காங்கே செடிகள் வளர்வதைப்போலச் செய்யலாம். கள்ளிச் செடிகளை வளர்ப்பது மிகவும் சுலபம். கள்ளிச்செடிகளில் முட்கள் இருக்கும். எனவே குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் கைகளுக்கு எட்டாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுக் கள்ளிச்செடி என ஒரு வகை உண்டு. கள்ளிச் செடிகள் பூக்கும். ஒன்றிரண்டு நாட்கள் வரை இருக்கும். மிக அழகாக இருக்கும். பல வண்ணங்களில் பூக்கும். கள்ளிச் செடிகளில் பூக்கள் பூப்பது என்பது என்னதான் இரும்பு இதயம் படைத்தவராக இருந்தாலும் அவர் மனத்தின் ஓரத்திலும் சிறிது ஈரம் இருக்கும் என்பதையே இது பிரதிபலிக்கிறது. எல்லா மனிதர்களிடமும் இரண்டு குணங்களும் இருக்கும். எது அதிகம், எது குறைவு என்பதைப் பார்த்து சமநிலைப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

கள்ளித் தோட்டமும் ஒருவகையான தோட்ட அமைப்புதான். தோட்டம் என்பது பலவகையான கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஒரு தோட்டத்துக்கு வருபவர்கள் பல்வேறு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள் என்று சொல்வதற்கில்லையே... எனவே தோட்டம் என்பது நமது வீட்டிலோ, ஊரிலோ உள்ளவர்களின் மனநிலையை ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷப்படுத்தக்கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் கள்ளித்தோட்டத்தை விரும்பவும் ஒரு பிரிவினர் இருப்பார்கள்.

தண்ணீர்த் தட்டுப்பாடு, பராமரிக்க ஆளில்லை என்ற நிலையில் கள்ளிச் செடிகள் அமைத்து பாறைப் பாங்கான தோட்டம் அமைப்பதன் மூலம் அழகான ஒரு லேண்ட்ஸ்கேப் கிடைக்கும். தோட்டம் அமைத்த திருப்தியும் கிடைக்கும். பராமரிப்புச் செலவுகளும் குறைவு. சென்னையில் கள்ளித் தோட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர் திரு ராஜேந்திரன். அவரிடம் விதம் விதமான கள்ளிச் செடிகள் கிடைக்கும். எங்களைப் போன்ற தோட்டக்கலை நிபுணர்களை அணுகியும் கள்ளிச் செடிகள் கிடைக்கும் இடங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டறியலாம்.

கள்ளிச்செடிகளுக்கென்றே பிரத்யேக நர்சரிகள் உண்டு. அங்கே வாங்கி, நீங்களே அவற்றை வைத்து உங்கள் தோட்டத்தை விரிவாக்க முடியும். ஒரு கன்று நட்டால் பக்கத்தில் குட்டிக் குட்டி கன்றுகள் வரும். ஒட்டுக்கட்டின கள்ளிகளின் விலை அதிகம். ஆனால், 2 வகை கள்ளிகள் ஒரே செடியில் இருக்கும். பெங்களூருவில் இந்த வகையான செடிகளுக்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. அது ஒரு விதை நிறுவனம். அங்கே இந்த ஒட்டுகள் நிறைய செய்கிறார்கள். அங்கே வாங்கிக் கொள்ளலாம்.இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் அழகும் அர்த்தமும் உண்டு என்பதற்கு பாறைத் தோட்டங்களே சிறந்த உதாரணம். source - dinakaranPost Comment

Post Comment