திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் :


Posted by-Kalki Teamதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மாதங் களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு விழாக்கள் நடக்கிறது. இதில் முக்கியமானது உத்திராயண புண்ணியகால கொடியேற்று விழாவாகும்.

12 மாதங்களில் ஆடி முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும், தை முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றன. தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சிணாயின புண்ணியகாலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்திராயண புண்ணயகாலம் என்றும் அழைப்பார்கள்.

வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேத நூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகின்றன. இந்த காலத்தில்தான் சூரியன் உக்கிரம் அதிகரிக்க தொடங்கும். அதன்படி உத்திராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் உற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு உற்சவம் இன்று தொடங்கியது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் உத்திராயண புண்ணிய கால கொடியை ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து 10 நாட்கள் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரர் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி தினமும் கால, மாலை வேளைகளில் மாடவீதியில் உலா வருகிறார்.

10-வது நாளான தைமாதம் முதல் நாள் ஜனவரி 14-ந்தேதி சனிக்கிழமை தாமரைக்குளத்தில் தீர்த்த வாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.


Post Comment

Post Comment