கவனிக்க வைத்த புத்தகங்கள் :


Posted by-Kalki Teamகாஃப்காவின் விசாரணை நாவலுக்குத் தமிழ் எதிரொலி என்று நட்ராஜ் மகராஜ் நாவலைக் கூறலாம். இந்த ஆண்டில் மிகவும் கவனம் பெற்ற நாவல் இது.

பவானி ஆற்றின் அழிவை முன்வைத்து ஆறுகள் அழிக்கப்படுவதைச் சொல்லும் நாவல் முகிலினி. சுற்றுச்சூழல் புனைவில் முக்கியமான வரவு.

எளிய மக்கள், பெண்கள் மீது நவீன யுகமும் சாதியும் நிகழ்த்தும் தாக்குதலை இமையத்தின் கதைகள் சொல்கின்றன. இவ்வாண்டில் சலசலப்பேற்படுத்திய சிறுகதைத் தொகுப்பு நறுமணம்

களம்-காலம்-ஆட்டம் தொகுப்பின் மூலம் கவனிக்கப்பட்ட சபரிநாதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வால். சர்வதேசத் தன்மையும் உள்ளூர்த் தன்மையும் ஒருங்கே பெற்ற தொகுப்பு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதி, அவரது இறப்புக்குப் பின் வெளிவந்த ஒரு கூர்வாளின் நிழலில்… எனும் இந்த நூல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

சிந்துவெளிப் பண்பாட்டில் காணப்படும் திராவிடச் சான்றுகளைப் பற்றி அகழாய்வு, மொழியியல், புவியியல், ஊர்ப் பெயர்கள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிட அடித்தளம்.

உலகளவில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திலேயே ஏற்றத்தாழ்வும் அதிகரித்துவருவதை ஆதாரபூர்வமான தரவுகளுடன் காட்டும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அறிக்கை. - அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு.

இந்துத்துவவாதிகள் எதிர்ப்பால் பெங்குவின் பதிப்பகம் திரும்பப் பெற்றுக் கொண்ட நூல் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு. இந்திய அளவில் கருத்துச் சுதந்திரம் நெருக்கடியைச் சந்தித்திருக்கும் சூழலில் முக்கியமான வரவு.

காந்தியவாதி தரம்பால், இந்தியக் கல்வி முறை பற்றி பிரிட்டிஷ் ஆவணங் களின் அடிப்படையில் எழுதிய அழகிய மரம் ஆங்கிலேயர்கள் எழுதிய இந்திய வரலாற்றை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது.

கற்காலம் தொடங்கி சமகாலம் வரையிலான உலக வரலாற்றை மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் கூறும் உலக மக்கள் வரலாறு எனும் இந்த நூல் தமிழுக்கு முக்கியமான வரவு.Post Comment

Post Comment