சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது :


Posted by-Kalki Teamசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழிப்பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

2-ந் தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும், 9 மணிக்கு திருக்கொடியேற்றமும், 10.15 மணிக்கு திருவெம்பாவை பாராயணமும், மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 8 மணிக்கு தேவார இன்னிசையும் நடக்கிறது. 3-ந் தேதி அதிகாலை மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வருவதும், பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வருவதும், இரவு சமய சொற்பொழிவு, புல்லாங்குழல் இசை, புஷ்பகவிமான வாகனத்தில் சாமி வீதி உலா வருவதும் நடக்கிறது. 4-ந் தேதி காலை புஷ்பக விமான வாகனத்தில் திருவீதி உலா வருதல், திருவெம்பாவை இசையும், மாலை சமய சொற்பொழிவும், இரவு நகைச்சுவை நிகழ்ச்சி, பக்தி மெல்லிசை, கற்பகவிருட்ச வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும்பொழுது மக்கள்மாராகிய கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தனது தாய்தந்தையரை சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

5-ந் தேதி காலை 5 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி வீதி உலா வருவதும், திருவெம்பாவை இசை, இரவு திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி, 10 மணிக்கு பறங்கிநாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருவதும் நடக்கிறது.

6-ந் தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருவதும், 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சி நடக்கிறது. மாலை ஊஞ்சல் மண்டபத்தில் சாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

8-ந் தேதி காலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி வீதி உலா வருவதும், மாலை 4 மணிக்கு நடராஜ சாமிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சாந்து சார்த்துதல், ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு மண்டகப்படி, இரவு பக்தி இசை, கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருவதும், இசை நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு சிவசக்தி விநாயகர் கோவில் முன்பு அன்னதானம் நடக்கிறது. 10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலா வருவதும், 7.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதில் சாமித்தேர், அம்மன்தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருழுதல், இன்னிசை, இரவு பொதுத்தொண்டில் போக்குவரத்து ஊழியர்களின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தி மெல்லிசையும், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருவதும், நள்ளிரவு சப்தாவர்ண காட்சியும் நடக்கிறது.

10-ம் நாள் திருவிழாவான 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜா மூர்த்தி வீதி உலா வருவதும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி, இன்னிசை, திருஆறாட்டும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் ஆறுமுகநயினார், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


Post Comment

Post Comment