மலைக்கோட்டை கோவிலில் 12-ந்தேதி 273 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது :


Posted by-Kalki Teamதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் வருகிற 12-ந்தேதி 273 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக எண்ணெய் கொப்பரையில் 6 ஆயிரம் மீட்டர் நீளம் திரி ஊற வைக்கப்பட்டது.

ஐம்பூதங்களில் நெருப்பு தலமாக வணங்கப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் வருகிற 12-ந்தேதி (திங்கட் கிழமை) கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அதே நாளில் தமிழகத்தில் உள்ள முக்கியமான முருகன் மற்றும் அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சுடலை எனப்படும் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலிலும் வருகிற 12-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதற்காக மலைக்கோட்டை கோவில் உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகில் மலை உச்சியில் இரும்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 273 அடி உயரம் உள்ள இந்த மலை உச்சி கோபுரத்தில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கொப்பரையில் நல்லெண்ணையுடன் இலுப்பை எண்ணெய் மற்றும் நெய் கலந்து நிரப்பப்பட்டு உள்ளது.

இந்த கொப்பரையின் நடுவில் பருத்தி காடா துணியினால் தயாரிக்கப்பட்ட 6 ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள திரி வைக்கப்படுகிறது. இந்த திரியை கொப்பரையில் வைக்கும்பணி நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.

நேற்றும் கோவில் பணியாளர்கள் திரிகளை கோவிலின் கீழ் தளத்தில் இருந்து மேலே தூக்கி சென்று கொப்பரையில் உள்ள எண்ணெயில் ஊற வைத்தனர். 5 நாட்கள் இந்த திரி எண்ணெய் கொப்பரையில் ஊறிய படியே இருக்கும்.

வருகிற 12-ந்தேதி காலை 5½ மணிக்கு தாயுமானவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் தாயுமானவர், மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி மலையின் மேல் பகுதியில் உச்சி பிள்ளையார் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டு அருகில் நிற்பார்கள். அப்போது மாலை 6 மணிக்கு மேல் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். கோவில் வளாகத்திலும் ,சுற்று வட்டார பகுதியிலும் உள்ள பக்தர்கள் இதனை மகா தீபமாக கருதி வழிபாடு செய்வார்கள். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Post Comment

Post Comment