கல்வி வரம் அருளும் கூத்தனூர் சரஸ்வதி கோவில் :


Posted by-Kalki Teamகல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. இதன் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

தலவரலாறு :

சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.

பூஜைகள், திருவிழாக்கள் :

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.

அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதன்பிறகு விடையாற்றி விழாவும், 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். அந்த நாட்களில் அம்பாளை ஊஞ்சலில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் செய்வர்.

சித்திரை மாதம் முதல் தேதியில் தொடங்கி 45 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இவை தவிர ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரமும் உண்டு. மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.

கும்பாபிஷேகம் நடத்த ஆனி மாதம் மக நட்சத்திரத்தன்று ஸமவித்ஸரா அபிஷேகம் நடை பெறும்.

நவராத்திரி 10 நாட்களும் காலை, மாலை என 2 வேளைகளிலும் விநாயகரின் வீதி உலா நடைபெறும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

அம்பாள் கோவிலில் காலை, மாலை, அர்த்த ஜாமம் என 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாள், சிவன், கோவில்களில் காலை, மாலை என இருகால பூஜைகள் உண்டு. பிரம்மபுரீஸ்வரருக்கு மகா சிவராத்திரி அன்று விசேஷ அபிஷேக அலங்காரம் நடக்கும்.

அமைவிடம் :

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.


Post Comment

Post Comment