காரியத்தடை நீக்கும் விநாயகர் சஷ்டி விரதம் :


Posted by-Kalki Teamகார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் விநாயகர் சஷ்டி விரதம் ஆகும்.

கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் விநாயகர் சஷ்டி விரதம் ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.

இந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள். அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், 21 இழையிலான நூல் காப்பை விரதத்தின் தொடக்க நாளில் கட்ட வேண்டும். இந்த நூலை ஆண்கள் தனது வலது கையிலும், பெண்கள் தங்களது இடது கையிலும் கட்ட வேண்டியது முக்கியம். மேலும் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டு, அவரவர் வசதிக்கேற்ப விநாயகருக்கு விருப்பமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.

இளநீர், கடலை, அவல், பொரி, எள்ளுருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மேலும் அறுகம்புல், எருக்கம்பூ, பன்னீர்பத்திரம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்தும் இறைவனை வழிபடலாம். விநாயகர் சஷ்டி விரத நாட்களில், வீட்டில் இருந்தபடியோ அல்லது தினமும் ஆலயங்களுக்கு சென்றோ, விநாயகரின் கதையை வாசித்தும், அவரது துதிப் பாடல்களைப் பாடியும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி நாளான சஷ்டி அன்று முழு உபவாசம் இருந்து, மறுநாள் காலையில் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின்னர், விநாயகரை பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

விநாயகருக்குப் பிரியமான மோதகத்தின் வெளித்தோற்றம் மாவு போன்று இருக்கும். ஆனால் உள் பாகத்தில் வெல்லமும், தேங்காயும் கலந்த சுவைமிக்க பூரணம் என்ற பொருள் இருக்கும். மேலே உள்ள மாவுப் பொருள் தான் அண்டம். உள்ளே இருக்கும் சுவையான பொருள், பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும். சுவை மிகுந்த இறைவனின் நற்குணங்களை மா என்னும் மாயை மறைத்து நிற்கிறது. அந்த மாயையை உடைத்தெறிந்தால், பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள்.

விநாயகர் சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பதால் வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். மேலும் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்.


Post Comment

Post Comment