கால்களுக்கு வலிமை தரும் வீரபத்ராசனம் முதல் நிலை :


Posted by-Kalki Team



இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கால்கள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.

செய்முறை :

விரிப்பில் தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம். இடது கால் பாதத்தை (படத்தில் உள்ளபடி) 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

இப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும். கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.

உடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம். இதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம்.

பலன்கள் :

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும். கால்கள் வலுப்பெறும். தோள்பட்டைகள் வலுப்பெறும். மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

எச்சரிக்கை :

இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.



Post Comment

Post Comment