மீண்டும் இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள்!


Posted by-Kalki Team1970, 80களில் பைக் பிரியர்களின் கனவு பிராண்டாக இருந்தது செக்கோஸ்லோவாக்கியா நாட்டு தயாரிப்பான ஜாவா மோட்டார்சைக்கிள்கள். தனித்துவமான தோற்றத்துடன் பவர்ஃபுல்லான எஞ்சின் மற்றும் இந்த பைக்கின் அலாதியான புகைப்போக்கி சப்தமும், அக்கால இளைஞர்களை சுண்டி இழுத்தது.

ஏற்றமான மலைப்பாதைகளாகட்டும், கரடுமுரடான சாலைகளாட்டும் அசாத்தியமாக செல்லும் திறன் பெற்ற ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு பெரும் ரசிக பட்டாளமே இருந்தது.

இன்றைக்கும் ஜாவா பைக்குகளுக்கு பைக் பிரியர்கள் மற்றும் சேகரிப்பாளர்களிடம் இருக்கும் மரியாதையை பார்த்தால் அதனை உணர்ந்து கொள்ளலாம். எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கி பொக்கிஷமாக பாதுகாக்க பலர் முனைந்து வருகின்றனர்.

1929ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் துவங்கப்பட்ட இந்த நிறுவனமானது, 1950ம் ஆண்டில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம். 1960ம் ஆண்டில் மைசூரை தலைமையிடமாக கொண்டு ஐடியல் ஜாவா இந்தியா லிமிடேட் ஸ்தாபிதம் செய்யப்பட்டதுடன், ஆலையையும் அமைத்து மோட்டார்சைக்கிள் உற்பத்தியும் துவங்கப்பட்டது.

மைசூர் ஆலையில் ஜாவா 353/04 ஏ டைப், யெஸ்டி 250 பி டைப், ஜாவா 350 டைப் 634 ட்வின் மற்றும் யெஸ்டி 250 மோனார்க் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. யெஸ்டி மோட்டார்சைக்கிள்களில் கிக் ஸ்டார்ட் லிவரும், கியர் லிவரும் ஒன்றே என்பது அக்காலத்திலேயே இதன் தொழில்நுட்ப புதுமைக்கு சான்று.

இதனால்தான், இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு இன்றளவும் பைக் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பும், அதனை வாங்குவோர் பொக்கிஷமாக பராமரித்து பாதுகாக்கப்படுவதை காணலாம்.

ஜாவா நிறுவனத்தின் தாயகமான செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டில் CZ Jawa என்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். நம் நாட்டில் தயாரிக்ப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்களின் பெட்ரோல் டேங்கில் O என்ற சின்னத்துடன் ஜாவா சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.

அந்தளவு பாரம்பரியமும், வாடிக்கையாளர்களிடம் பிரியத்தையும் நன்மதிப்பையும் பெற்ற ஜாவா பைக் பிராண்டு இந்திய மண்ணை விட்டு சென்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், மைசூரில் இருந்த ஜாவா ஆலையில் 1996ம் ஆண்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு ஜாவா நிறுவனம் ஜாவா மோட்டோ என்ற புதிய பெயரில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிள் 1960ம் ஆண்டிலிருந்து தொழில்நுட்ப அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதே அதன் நம்பகத்தன்மைக்கு சான்றாக கூறலாம். இந்த மோட்டார்சைக்கிள் மத்திய அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் விற்பனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜாவா பிராண்டில் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை மஹிந்திரா வாகன குழுமம் வாங்கியிருக்கிறது.

தனது அங்கமான கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜாவா பிராண்டின் உரிமத்தை பெற்றிருக்கிறது மஹந்திரா நிறுவனம். மத்திய பிரதேச மாநிலம், பீதம்பூரில் உள்ள மஹிந்திரா இருசக்கர வாகன ஆலையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலையில்தான் மஹிந்திரா செஞ்சூரோ, கஸ்ட்டோ மற்றும் மோஜோ ஆகிய இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஜாவா பிராண்டுக்கு புத்துயிர் கொடுத்து இந்திய பைக் பிரியர்களிடமிருந்து புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.Post Comment

Post Comment