6 மணி நேரம் அபிஷேகம் காணும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்


Posted by-Kalki Teamதஞ்சாவூர் பெரிய கோவில் ஆலயக் கோபுரம், விமானம் மட்டுமல்ல.. சுவாமி, அம்பாள், நந்தி என அனைத்து சிலைகளும் அளவில் மிகப்பெரியவை.

ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரம், மாமன்னன் ராஜராஜசோழனின் அவதார திருநாள் ஆகும். கல்லிலே கலை வண்ணம் மட்டுமின்றி, கடவுளையும் புகுத்தி அகிலம் காக்கும் ஈசனுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவன். தஞ்சாவூர் பெரிய கோவில் ஆலயக் கோபுரம், விமானம் மட்டுமல்ல.. சுவாமி, அம்பாள், நந்தி என அனைத்து சிலைகளும் அளவில் மிகப்பெரியவை.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் போற்றிப்பாடியுள்ள தஞ்சாவூர் தளிக்குளத்து ஈசன் கோவிலையே, ராஜராஜ சோழன் மாற்றி அமைத்து பெரிய கோவிலாக்கினான் என்று கூறப்படுகிறது. இந்த கலிகாலத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றப் பரிகாரமாகப் பயன்படுபவை, தேவாரப் பதிகங்கள். அந்தப் பதிகங்களை சிதம்பரம் கோவிலின் மூடிக்கிடந்த அறையில் இருந்து எடுத்து வந்து நமக்கு அளித்தவன் ராஜராஜ சோழன்.

கி.பி.1003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரிய கோவில் அமைக்கும் பணி, 1009-ம் ஆண்டு முடிவடைந்தது. கோவிலைச் சுற்றிலும் மதில் சுவரும், அகழியும் அமைக்கப்பட்டது. கோட்டை போல் இருக்கும் கோவிலின் நுழைவு வாசலுக்கு கேரளாந்தகன் திருவாயில் என்று பெயர். அதனைக் கடந்தால் ராஜராஜன் திருவாயில். இந்த இரண்டு வாசல்களையும் கடந்து சென்றால், மிகவும் விசாலமான பரந்த வெளியில் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தல விநாயகர் கன்னி விநாயகர். ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார் வராகி அம்மன். கன்னி விநாயகருக்கு அடுத்த மரியாதை-பூஜை இந்த அம்மனுக்கே. பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம்.

மூலவர் கருவறையின் நேர் எதிரில் நந்தி மண்டபம் உள்ளது. இந்த நந்தி ஒற்றைக் கல்லால் ஆனது. 12 அடி உயரம், 19½ அடி நீளம், 8¼ அடி அகலம் கொண்டது. இந்த நந்தியை தரிசித்து விட்டு, மூலவரை தரிசிக்கச் செல்லும் வழியில் சிறிய வடிவில் பைரவர் காட்சியளிக்கிறார். இவரை அஷ்டமி நாட்களில் உளுந்து வடை மாலை சாத்தி, நெய் தீபமிட்டு வழிபட்டால் கல்வியும், செல்வமும் நம்மை நாடி வரும்.

கருவறையில் பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்தின் உயரம் 13 அடி. அதன் கீழ் பகுதியான வட்டவடிவ பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். சுமார் 25 ஆயிரம் கிலோ எடை கொண்டது இந்த சிவலிங்கம். பிரகதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்திலேயே நமது கவலைகள், வறுமைகள், பிணிகள் அகன்று விடுவதை அனுபவத்தில் உணரலாம். வர்ணிக்க முடியாத கன கம்பீரமான, அழகான, எடுப்பான தோற்றத்தில் ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த பிரகதீஸ்வரரை பிரதிஷ்டை செய்தவர், பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார். கோவிலின் மேற்கு பிரகாரத்தில் கருவூர்த் தேவருக்கு சிறிய கோவில் உள்ளது. இவர் பாடிய திருவிசைப்பா பதிகம் பெருவுடையார் மீது பாடப்பட்டுள்ளது. கருவூர் சித்தரின் சன்னிதியில் வியாழன் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரகதீஸ்வரர் கோவிலின் பக்கச் சுவர்களிலும், மாடங்களிலும் சந்திரசேகரர், பிட்சாடனர், சூல தேவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்த நாரீஸ்வரர், கங்காதரர், கல்யாண சுந்தரர், மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி முதலியோர் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியர், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர். சண்டிகேஸ்வரரும் பெரிய தனிச் சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.

இத்தல அம்பிகை பெரியநாயகி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நவராத்திரியில் அம்பாளுக்கு தினமும் ஒவ்வொரு அம்மன் வடிவில் அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரியில் இத்தல அம்மன் முன் அமர்ந்து, இரவில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இத்தல நவக்கிரகங்களை வழிபட்டால் சகல நவக்கிரக தோஷங்களும் அகலும்.

இங்கு வைகாசியில் ஆட்டைத் திருவிழா என்னும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி என பல்வேறு திருவிழாக்களை தஞ்சை பெரியகோவில் கண்டாலும், அவற்றுள் மிகவும் விசேஷமான பெருவிழாவாக இருப்பது ஐப்பசி சதயம் விழா ஆகும். ராஜராஜ சோழனின் திருஅவதார நாளே ஐப்பசி சதயம். இந்த விழாவில், ராஜராஜேஸ்வர நாடகம் பாவனையாக நடித்துக் காட்டப்படுகிறது. மேலும் அன்றைய தினம் மூலவர் பெருவுடையாருக்கு பிரமாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடத்தப்படும். இரவில் சுவாமி புறப்பாடும் உண்டு.

ஐப்பசி சதயம் விழாவிலும் முதல் பூஜை வராகி அம்மனுக்குத்தான். ராஜராஜ சோழனின் குலதெய்வம் இந்த வராகி அம்மன் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ராஜராஜ சோழன் அவதார நாளான, ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று, பெருவுடையாருக்கு வில்வம், வன்னி, பிச்சி, நொச்சி, சாம்பிராணி, தைலம், திரவியப்பொடி, வாசனைப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், மாதுளை முத்து, பலாச்சுளை, திராட்சை, விளாம்பழம், அன்னாசி, சந்தனம், அன்னம், பன்னீர், இளநீர் உள்பட 47 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகமும், இந்த ஆலயத்தில் நடைபெறும் முத்திரைப் பதிக்கும் விழாக்களில் ஒன்றாகும்.

தஞ்சாவூர் நகரின் மத்தியிலேயே பெரியகோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.


Post Comment

Post Comment