முயலாக மாறிய மங்கண முனிவர் :


Posted by-Kalki Teamதங்களை அறியாமல் அவர்கள் செய்யும் தவறுக்கும், தகுந்த தண்டனை உண்டு கதையை பார்க்கலாம்.

சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் மங்கண முனிவர். இவர் அனுதினமும் இறைவனை அழகிய மலர்களைக் கொண்டு அலங் கரித்து வழிபடுவது வழக்கம். இறைவழிபாட்டிற்காக, தினமும் அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, அழகிய மலர் களைப் பறித்து வருவார்.

அன்றைய தினமும் மலர்களைப் பறிப்பதற்காகக் காட்டிற்குள் சென்றார். அப்போது ஒரு இடத்தில் இனிமையான நறுமணம் வந்தது. நறுமணம் வந்த திசையை நோக்கிச் சென்ற அவர், ஒரு முட்செடிகளுக்கிடையில் பூத்திருந்த மலர்களில் இருந்து அந்த நறுமணம் வந்ததை அறிந்து கொண்டார்.

நறுமணம் மிகுந்த அந்த அழகிய மலர்களைப் பறித்துச் சென்று, சிவலிங்கத்தை அலங்கரிக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த மலர்களை பறித்த போது, அவரது கை, கால் மற்றும் உடலின் சில பகுதிகளில் முட்செடிகளில் இருந்த முட்கள் குத்தி காயப்படுத்தின. அதைப் பொருட்படுத்தாத முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர்களைப் பறிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அப்போது அவர் ஒரு ஆச்சரியத்தை உணர்ந்தார். முட்கள் குத்திய இடங்களில் இருந்து ரத்தம் வரவில்லை. மாறாக, நறுமணம் மிகுந்த வெந்நீர் கசிந்தது. முள் குத்திய இடங் களில் வலி இல்லாமல் போனது. இது அனைத்தும் இறைவன் செயல் என்று எண்ணியவர், மகிழ்ச்சியில் ஆடிப்பாடினார். துள்ளிக்குதித்தபடியே தன் இருப்பிடம் செல்லத் தொடங்கினார்.

சாபம்

பரவச நிலையில் இருந்த அவருக்கு எதிரில் இருந்த எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை. வழியில் ஒரு மரத்தடியில், தூமாப்பர் என்ற முனிவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கவனிக்காத மங்கண முனிவர், அவரை தன் கால்களால் மிதித்தபடி சென்றார்.

தன்னை மிதித்தது மட்டுமில்லாமல், அதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியோடு, ஆடிப்பாடி செல்லும் மங்கண முனிவரைப் பார்த்து, தூமாப்பருக்கு கோபம் வந்தது. அவர், ‘என்னை மிதித்து அவமதித்ததுடன், என் தவத்தையும் கலைத்துச் செல்லும் மங்கண முனியே, நீ செய்தது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா?’ என்று சத்தம் போட்டார்.

ஆனால் இறைவனின் அற்புதத்தால் உற்சாகத்தில் இருந்த மங்கண முனிவருக்கு, தூமாப்பரின் வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை.

இதனால் தூமாப்ப முனிவருக்கு கோபம் அதிகரித்தது. ‘தவறு செய்தது தெரியாமல், அந்த தவறைச் சுட்டிக்காட்டி நான் எச்சரித்ததையும் கண்டுகொள்ளாமல் செல்லும் மங்கண முனியே, உன் இரண்டு கால்களும் முடமாகி போகட்டும். என் தவத்தைக் கலைத்த உன்னுடைய உருவம், தாவிச் செல்லும் முயலாக மாறித் துன்பம் அடையட்டும்’ என்று சாபமிட்டார்.

அவர் கொடுத்த சாபத்தால் மங்கண முனிவரின் கால்கள் முடமாகிப் போனது. அதன் பின்புதான், அவருக்குத் தான் செய்த தவறும், அதற்கு தூமாப்ப முனிவர் கொடுத்த சாபமும் தெரிய வந்தது. தன்னுடைய தவறுக்கு முனிவரிடம் வருத்தம் தெரிவிப்பதற் காக அவர் நொண்டியபடியே திரும்பி வந்தார்.

‘சுவாமி! இன்று எனது இறை வழிபாட்டுக்காக மலர் பறிக்கச் சென்ற போது, அங்கிருந்த முட்செடியின் முட்கள் என் உடலின் பல இடங்களில் குத்தியது. ஆனால் அந்த இடங்களில் ரத்தம் வராமல் நறுமணமான வாசனைத் திரவமே வந்தது. மேலும், முட்கள் குத்திய இடங்களில் எந்த வலியும் இல்லை. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் செல்லும் போதுதான், என்னையும் அறியாமல் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. என்னை மன்னித்து, எனக்குத் தகுந்த சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்றார்.

அவருடைய அமைதியான வேண்டுதலில் மனமிரங்கிய தூமாப்ப முனிவர், ‘மங்கண முனிவரே! இறை வழிபாட்டிற்கு மலர் பறிக்கச் செல்லும்போது, அங்கிருக்கும் முட்செடிகள் எதுவும் குத்தி துன்பம் தராமலிருக்க, தனது கையும், கால்களும் புலிக்கால் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிப் பெற்றார் வியாக்ரபாத முனிவர். அவ்வாறு அவர் வேண்டி வழிபட்ட சிவாலயத்திற்குச் சென்று வழிபடும் போது உம்முடைய இந்த சாபம் தீரும்’ என்று விமோசனத்திற்கான வழியைக் கூறினார்.

அதைக் கேட்ட மங்கண முனிவர் மகிழ்ச்சியடைந்து, தூமாப்பர் முனிவரை வணங்கினார். சிறிது நேரத்தில் மங்கண முனிவர் முயலாக மாறிப் போனார்.

விமோசனம்

முன்னங்கால்கள் இரண்டும் முடமாகி இருந்ததால், அந்த முயலால் தாவிக் குதித்து வேகமாக ஓட முடியவில்லை. தன்னுடைய இயலாமையை நினைத்து முயல் வருத்தமடைந்தது. காட்டுநாய் போன்ற விலங்குகளால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்துப் பயந்த முயல், மெதுவாகப் பதுங்கிப் பதுங்கிச் செடி கொடிகளின் மறைவிலேயேச் சென்று கொண்டிருந்தது.

அதனால், முயலின் உடல் முழுவதும் முட்செடிகளிலிருந்த முட்கள் குத்தி காயங்கள் ஏற்பட்டன. தன்னுடைய உடலில் ஏற்பட்ட காயத்தின் வலியால் முயல் பெரும் துன்பமடைந்தது.

இப்படியே மிகுந்த துன்பத்துடன் சென்று கொண்டிருந்த முயல், ஒரு ஆண்டுக்குப் பிறகு, கன்னிமாவனம் எனும் காட்டிற்குள் நுழைந்தது. அந்தக் காட்டிற்குள் இருந்த சிவாலயத்தைக் கண்டதும், தான் மங்கண முனிவர் என்பதும், தூமாப்பர் முனிவர் கொடுத்த சாபத்தால் முயல் உருவத்திற்கு மாறியிருப்பதும், அதன் நினைவுக்கு வந்தது.

உடனே அந்த முயல் சிவாலயத்துக்குள் சென்று, அங்கிருந்த சிவலிங்கத்தின் முன்பாக நின்று, தனக்குச் சாப விமோசனம் அளிக்க வேண்டி வழிபட்டது. பின்னர் சில முறை சிவலிங்கத்தைச் சுற்றி வந்து, இறைவனை வேண்டியபடியே சிவலிங்கம் முன்பாக களைப்பில் படுத்து விட்டது.

முயலின் நிலை கண்டு இரங்கிய ஈசன், ‘தூமாப்பர் முனிவரால் சாபம் பெற்ற நீ, முயல் உருவில் இருந்து சுய உருவம் பெற்று எழுக’ என்றார். அந்தக் குரல் முயலின் காதிலும் ஒலித்தது. உடனடியாக முயல் உருவில் இருந்த மங்கண முனிவர் விமோசனம் பெற்று எழுந்தார். இறைவனைத் தேடினார். இறைவனின் உருவம் அவரது கண்களுக்குத் தெரிய வில்லை. எனவே தன் எதிரில் இருந்த சிவலிங்கத்தை வணங்கினார்.

பின்னர், ‘இறைவா! எனக்குத் தாங்கள் நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும், எனக்குச் சாப விமோசனம் கிடைக்கத் துணை நின்றதில் மகிழ்ச்சி. தாங்கள் இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும், அவர்களின் துன்பங்களை நீக்கி அருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இறைவனும், ‘முனிவரே! நீ வேண்டியபடி நான் இந்த தலத்தில் தோன்றாத் துணைநாதர் என்னும் பெயரில் வீற்றிருந்து, இங்கு வரும் அன்பர்களின் துன்பங்களை நீக்கி, வாழ்வில் வளம் பெருகச் செய்வேன்’ என்று அருளினார்.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சிறிய மகிழ்ச்சியில், பலரும் தங்களை மறந்து போய் விடுகின்றனர். இந்தநிலையில், தங்களை அறியாமல் அவர்கள் செய்யும் தவறுக்கும், தகுந்த தண்டனை உண்டு என்பதையே மங்கண முனிவர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.


Post Comment

Post Comment