ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீபாண்டுரங்கர் ஆலயம் - தென்னாங்கூர் :


Posted by-Kalki Teamபூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட இந்துக் கோவில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.

தென்னாங்கூர் (Thennangur) தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட இந்துக் கோவில் ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. தென்னாங்கூர் மாநில தலைநகரான சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில், காஞ்சீபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்து உள்ளது தென்னாங்கூர். காஞ்சீபுரத்தில் இருந்து 34 கி.மீ. தூரத்தில், வந்தவாசிக்கு முன்பாக இந்த ஊர் உள்ளது.

காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் அனைத்து பஸ்களும் தென்னாங்கூர் வழியாகவே செல்லும். சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாகவும் வரலாம். உத்திரமேரூரில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த தலம்.

இங்கு உள்ள ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீபாண்டுரங்கர் ஆலயம் நம்மை அப்படியே ஈர்த்துக் கொள்ளும். அத்தனை அழகு. பூரி ஜகந்நாதர் ஆலயம் போன்று கட்டப்பட்ட கோபுரம், நம்மை வியக்கச் செய்யும்.

ஆதிசங்கரரின் ஆம்நாய மடங்களில் ஒன்றான ஜோதிர் மட பரம்பரையில் ஆறாவது பீடாதிபதியாக விளங்கிய சத்குரு ஸ்ரீஞானாநந்த கிரி சுவாமிகளின் சீடரான ஸ்ரீஅரிதாஸ்கிரி சுவாமிகள், தன் குருஜியின் பெயரில் ஸ்ரீஞானானந்த கிரி பீடத்தையும், இந்தக் கோவிலையும், தான் பிறந்த ஊரான தென்னாங்கூரில் கட்டினார். இந்தக் கோவில் கும்பாபிஷேகம் 1996-ல் நடைபெற்றது. கோவிலின் சிறப்பு, வடக்கும் தெற்கும் சேர்ந்த கட்டிடக் கலையே.

இந்தியாவின் நான்கு நாதர்கள் (அதாவது சுயம்பு மூர்த்திகள்) பிரசித்திப் பெற்றவர்கள். தெற்கே-டோடாத்திரிநாத், வடக்கே- பத்ரிநாத், மேற்கே- பண்டரிநாத், கிழக்கே- ஜெகந்நாத் என்பார்கள். நேர்க்கோட்டில் அமைந்துள்ள இந்தத் தலங்களைச் சுற்றி வந்தாலே, மகா புண்ணியம் என்பது ஐதீகம். தவிர 1008 சிவ தலங்கள், 108 வைணவ தலங்களை தரிசித்த புண்ணியமும் வந்து சேரும்.

இங்கு, மாதந்தோறும் உற்சவம் நடைபெறுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு தங்கத் தேரில் பவனி வரும் விட்டலனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தமிழகத்தின் 19 தங்கத் தேர்களில், இது உயரமானது என்று சொல்கிறார்கள்.

கோவில் மூலவர் ஸ்ரீபாண்டுரங்கர் ஸ்ரீருக்மாயியுடன் தினமும் ஒவ்வோர் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீராமர், ஸ்ரீ லட்மி நாராயணன் கோவர்த்தன கிரி, சயன அலங்காரம் காளிங்க நர்த்தனம் போன்ற அலங்காரங்களில் காட்சி தரும் ஸ்ரீபாண்டுரங்கனை தரிசித்தால், நம் பாவம் எல்லாம் பறந்தோடும். ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்யப்படும் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம், ஏழுமலையானை கண்முன் நிறுத்துகிறது.

புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வெள்ளித் தேரில் உற்சவம் நடைபெறும். அப்போது கருட சேவையைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

மீனாட்சி அம்பிகை பிறந்த ஊர் தென்னாங்கூர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. எனவே ஸ்ரீ மீனாட்சி அம்மைக்கும் இங்கு சந்நிதி இருப்பது விசேஷம்.


Post Comment

Post Comment