சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கும் அஷ்டபந்தன கலச பூஜை :


Posted by-Kalki Teamசபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் இன்று அஷ்டபந்தன கலச பூஜை நடத்தப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையினை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் மகேஷ் மோகனரு ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது.

17- ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தது.

கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முன்னாள் தடகள வீராங்னை பி.டிஉஷா இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்தார்.

சபரிமலையில் 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அஷ்டபந்தன கலச பூஜை இன்று (வியாழக்கிழமை) சபரிமலையில், ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்றது.

இன்று அதிகாலை 4.40 மணி முதல் 6 மணி வரை அஷ்டபந்தன கலச பூஜை சன்னிதானத்தில் நடைபெறும். ஐயப்பன் கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரரும், மாளிகப்புரத்தம்மன் கோவிலில் தந்திரி மகேஷ் மோகனரும் அஷ்ட பந்தன கலச பூஜைகளை நிறைவேற்றுவார்கள்.

இரு கோவில்களிலும் அஷ்டபந்தன கலச பூஜைக்கான நேரம் ஒரே நேரமாக உள்ளதால் 2 தந்திரிகளும் அஷ்ட பந்தன கலச பூஜையினை நிறைவேற்றுகிறார்கள்.

அஷ்ட பந்தன கலச பூஜை நடைபெறுவதையொட்டி, இன்றும், நாளையும் நெய் அபிஷேகம் நடைபெறாது. ஐப்பசி மாத பூஜைகளுக்கு பின் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு நடைஅடைக்கப்பட்டு, மீண்டும் ஸ்ரீசித்ரா ஆட்ட திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற ஸ்ரீசித்ரா ஆட்ட திருவிழா 29-ந் தேதி நடைபெறுகிறது.


Post Comment

Post Comment