சென்னை திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது :


Posted by-Kalki Teamதிருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை ஆலோசனைக்குழு தலைவர் என்.ஸ்ரீகிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமலையில் பிரம்மோற்சவ விழா நடக்கும் போது சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திலும் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இங்கு இன்று (3-ந்தேதி) பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 11-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவம் நடக்கும் ஒவ்வொரு நாளும் மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நெய்வேத்தியம் செய்யப்படும்.

முதல் நாளில் இருந்து 10-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுகிறார். இன்று மாலையில் பெருமாள் சேஷ வாகனத்திலும், 4-ந்தேதி மாலையில் பெருமாள் ஹம்ச வாகனத்திலும், 5-ந்தேதி மாலையில் பெருமாள் முத்தியப்பு பந்திரி வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

6-ந்தேதி மாலை கல்பவிருக்‌ஷ வாகனத்திலும், புரட்டாசி சனிக்கிழமையான 8-ந்தேதி மாலை கஜ வாகனத்திலும், அன்றைய தினம் காலை 9 மணிக்கு பெருமாள் ஹனுமந்த வாகனத்திலும் காட்சி அளிக்கிறார். 9-ந்தேதி மாலை சந்திரபிரபை வாகனத்திலும், 10-ந்தேதி அஸ்வா வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட வாகன ஊர்வலம் 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஊர்வலம் தேவஸ்தானம் அமைந்துள்ள வெங்கடநாராயண சாலை, ராமானுஜம் தெரு, தண்டபாணி தெரு, சவுந்தரராஜன் தெரு ஆகியவற்றின் வழியாக செல்லவுள்ளது. இந்த ஊர்வலத்துடன், பரதநாட்டியம், விஷ்ணு சஹஸ்ர்நாமம் ஓதுதல் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் நடக்கவுள்ளது. 11-ந்தேதி காலை 8.30 மணியளவில் சக்கர ஸ்நானத்துடன் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான 2017 காலண்டர் மற்றும் டைரியை ஆந்திர முதல்-மந்திரி திருப்பதியில் இன்று வெளியிடுகிறார். காலண்டர் விலை ரூ.7 மற்றும் ரூ.10-க்கும், டைரி விலை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தியாகராயநகர் தேவஸ்தான அலுவலகத்தில் 4-ந்தேதி முதல் டைரி மற்றும் காலண்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

புரட்டாசி மாதம் என்பதால் தியாகராயநகர் தேவஸ்தான கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மற்ற நாட்களை காட்டிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலை 4 முதல் இரவு 10.30 வரை தேவஸ்தான கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவைகளும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் இறைவனின் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பக்தர்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு என்.ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.


Post Comment

Post Comment