புத்தரின் புன்னகை :


Posted by-Kalki Teamபுத்தரின் புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. அவர் ஒவ்வொரு இடங்களாகச் சென்று தனது போதனைகளை எடுத்துரைத்து மக்களை நல்வழிப் படுத்திக் கொண்டிருந்தார். ஒரு முறை அவரைப் பார்ப்பதற்காக ஒருவர் வந்தார். அவரது கைகள் இரண்டும் மலர்களை ஏந்தியிருந்தது. அந்த மலரை புத்தருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும் புன்னகைத்த புத்தர், கீழே போடு! என்றார்.

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. எதைக் கீழே போடச் சொல்கிறார்? என்று குழம்பிப் போனார். நம்முடைய கையில் இருப்பது மலர்கள்தான். மலரை யாராவது தரையில் வீசச் சொல்வார்களா?. ஒரு வேளை நான் இடது கையிலும் மலர்களை வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி தான் இப்படிச் சொல்கிறாரோ. இடது கையால் ஏந்தி வந்த மலர்களால் அர்ச்சிக்கக் கூடாது என்று நினைக்கிறாரோ, என்னவோ? என்று நினைத்தார்.

உடனே இடது கையில் வைத்திருந்த மலர்களை தரையில் எறிந்து விட்டு, வலது கையில் மலர்களுடன் நின்றார். அப்போது அவரைப் பார்த்து கீழே போடு! என்றார் புத்தர்.

இப்போது வலது கையில் இருந்த மலரையும் தரையில் வீசிவிட்டு வெறும் கையுடன் நின்றார் அந்த நபர்.

மீண்டும் அதே புன்னகையுடன் கீழே போடு! என்றார் புத்தர்.

வந்தவரோ திகைப்புடன், இரண்டு கைகளில் இருந்ததையும் கீழே போட்டு விட்டேன். இனி கீழே போடுவதற்கு என்ன இருக்கிறது? என்றார்.

புத்தர் கூறினார். நான் கீழே போடச் சொன்னது மலர்களை அல்ல. நீ மலர்களோடு சேர்த்துக் கொண்டு வந்த நான் என்ற எண்ணத்தைத் தான். நான் இதைச் செய்தேன். அதைச் செய்தேன் என்று கூறும்போது, அங்கு நான் என்ற அகந்தையே பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறது என்றார்.


Post Comment

Post Comment