திருமலையில் செப்டம்பர் 4ல் வராக ஜெயந்தி கொண்டாட்டம் :


Posted by-Kalki Teamதிருமலையில் வரும் 4ம் தேதி வராக ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் மாதம் திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் பற்றிய பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

வருகிற 4ம் தேதி வராக ஜயந்தி திருமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அப்போது உற்சவமூர்த்தி பிராகார உலா வந்து தரிசனம் தருவார்.

5ஆம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு திருமலை இரண்டாவது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

செப்டம்பர் 15ம் தேதி ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 16ம் தேதி பௌர்ணமி சிறப்பு பூஜையும் கருடசேவையும் நடைபெறுகிறது. இதையொட்டி உத்ஸவமும் விமரிசையாக நடைபெறும்.

27ம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அந்தவேளையில், உத்ஸவத் திருமேனி அலங்கரிக்கப்பட்டு, பிராகாரத்தில் வீதியுலா வரும் வைபவம் கோலாகலமாக நடைபெறும்.

வராக ஜெயந்தி

பகவான் விஷ்ணு இப்பூவுலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல அவதாரங்களை எழுத்துள்ளார். இதில் வராக அவதாரம் மூன்றாவது அவதாரமாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு பிரளய காலம் முடிந்தபின் பூமி வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்தது! மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தினார். இவரை ஆதி வராகர் என்று கூறுவர்.

ஒருசமயம் இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமி யைப் பாய்போலச் சுருட்டி கடலுக்குள் கொண்டு சென்று விட்டான். பகவான் மீண்டும் வராக வடிவெடுத்து கர்ஜனை செய்தார்.

வராக மூர்த்தியின் கர்ஜனையால் அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன. நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், ஸ்மிருதிகளும் புராணங்களும் செவிகளாகவும், சூரிய - சந்திரர் இரு கண்களாகவும், நாகராஜன் வாலாகவும், யாகங்கள் கோரைப் பற்களாகவும், அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, கட்டை விரல் அளவுள்ள வராக வடிவெடுத்து, சில நொடிகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியுற்று சமுத்திரத்தினுள் மூழ்கினார். அரக்கனுடன் போரிட்டு அவனை சம்ஹரித்து பூமிதேவியைக் காத்து ரட்சித்தார். அதனால் சுவாமி பூவராக மூர்த்தி எனப்பட்டார்.

பூவராக சுவாமி சங்கு, சக்கரம் ஏந்திய இருகரங்களையும், பாண்டுரங் கனைப்போல இடுப்பில் கை வைத்த படியும் தரிசனம் தருகிறார்.

ஒரு சமயம் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட, சிவபெருமான் வானுக்கும் பூமிக்கும் நடுவே ஒரு பெரிய நெருப்புத் தூணாய் வந்து நின்றார். பிரம்மன் தூணின் முடியைக் காணச் சென்றார்.

திருமால் மீண்டும் வராகத் திருவுருவம் எடுத்து ஈசனின் அடியைக் காண பூமியை அகழ்ந்து கீழே சென்றார். வெகுதூரம் சென்றும் ஈசனின் அடிகளைக் காணமுடியவில்லை. இவ்விதம் பலமுறை பகவான் வராக அவதாரம் எடுத்துள்ளார். ஸ்ரீ வராக ஜெயந்தி அன்று அவரை பூஜித்து அருள் பெறுவோம்.


Post Comment

Post Comment