பொங்கல் படங்கள் ஒரு பார்வை :


Posted by-Kalki Teamபொங்கல் திருநாள் தமிழ் சினிமாவுக்கு எப்போதும் முக்கியமானது. முன்னணி நடிகர்களின் மூன்று நான்கு படங்களேனும் வெளியாகும். முக்கியமான திருவிழா தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதி காரணமாக பொங்கல் மேலும் முக்கியமாகிறது. 2016 பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் வெளியாகின்றன.

மிருதன்:

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் மிருதன் பொங்கலுக்கு வெளியாவதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு முற்றிலும் புதிதான ஸோம்பிக்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் ஜெயம் ரவியின் படம் என்பதால் மிருதனுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

கதகளி:

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் கதகளி பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளனர். பாண்டிராஜின் படங்கள் மினிமம் கியாரண்டி உள்ளவை. இதுவரை அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வியடைந்ததில்லை. கதகளி ஆக்ஷன் படம் என்பதால் இதுவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பாண்டி நாடு படத்துக்குப் பிறகு விஷாலின் மாஸ் இமேஜும் சற்று கூடியுள்ளது கதகளிக்கு பலமளிக்கும்.

தாரை தப்பட்டை:

பாலாவின் இயக்கத்தில் தயாராகியுள்ள தாரை தப்பட்டை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 வெளியாகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இளையராஜாவின் ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கலைகளை மைமயமாக வைத்து இந்தப் படத்தை பாலா எடுத்துள்ளார். சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ளனர். பாலாவின் வழக்கமான ஆக்ரோஷ சண்டைகள் படத்தில் உள்ளன. ஐங்கரன் தாரை தப்பட்டையை வெளியிடுகிறது.

24 :

சூர்யா தயாரித்து நடித்துள்ள 24 படம் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளது. விக்ரம் கே.குமார் இயக்கியுள்ள இப்படம் சயின்ஸ் ஃபிக்ஷனாக தயாராகியுள்ளது. ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நான்கு படங்களில் கதகளி, மிருதன், தாரை தப்பட்டை ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அத்துடன் சிம்புவின் இது நம்ம ஆளு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் எப்போதோ முடிந்துவிட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு பசங்க 2, கதகளி என இரண்டு படங்களை பாண்டிராஜ் இயக்கி முடித்துவிட்டார். எனினும் இது நம்ம ஆளு இன்னும் வெளியாகாமலே உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவதும் இன்னும் உறுதியாகவில்லை.

சுந்தர் சி. இயக்கியிருக்கும் அரண்மனை 2 படமும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.பேய்ப் படமான இதில் த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதகளி, மிருதன், தாரை தப்பட்டை படங்கள் வெளியானால் அரண்மனை 2 தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது.


Post Comment

Post Comment