காரின் மைலேஜை அதிகரிக்க 15 வழிகள்... :


Posted by-Kalki Teamகார் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு, அதை எப்படி முறையாகப் பராமரிப்பது? மைலேஜ் அதிகம் தரும் வகையில் எப்படி வைத்திருப்பது? என்பது தெரிவதில்லை. வாங்கிய புதுசுல கொஞ்ச நாள் நல்லாயிருந்தது... அப்புறம் மைலேஜ் கம்மியாகிடுச்சு... என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கிறோம்.

அது காரின் தவறல்ல. நம்முடைய அலட்சியம்தான் அதற்கு காரணம். காரை கண் போல கவனித்துக் கொண்டால், ஒருபோதும் அது உங்களை நடுத்தெருவில் நிற்க வைக்காது. அதேபோல், நம்மை அறியாமல் அன்றாடம் செய்யும் சில தவறுகள்தான் மைலேஜ் குறைவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

கீழ்க்கண்ட சில டிப்ஸ்களை நீங்கள் கவனத்தில் கொண்டீர்களேயானால், உங்கள் கார் நீங்கள் சொன்னபடி எல்லாம் கேட்கும்.

1. பொதுவாகவே கார்களில் 60 - 80 கி.மீ. வேகம் என்பது சராசரியானது. அதே வேகத்தில் தொடர்ந்து கார்களை இயக்கினால், மைலேஜ் அதிகரிக்கும். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகமாகச் செல்லும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. அப்படி பயணித்தால் மைலேஜ் வெகுவாகக் குறையும். எனவே, வேகக் கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று.

2. ஆக்சிலேரட்டர் பெடல்களை மிகவும் கடினமாக கையாண்டால் எரிபொருள் இழப்பு ஏற்படும். கியர்களை மென்மையாக மாற்றுவதும் அவசியம். அவ்வாறு ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள சிறிய பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். அதாவது உங்கள் ஆக்சிலேரட்டர் பெடல் மீது முட்டை இருப்பதைப் போன்றும், அது உடையாமல் பெடலை அழுத்த வேண்டும் என்பதைப் போன்றும் கற்பனை செய்து கொண்டு நீங்கள் செயல்பட்டால், மென்மையாகக் கையாளும் பழக்கம் கைகூடும்.

3. கியர்களை வேகத்துக்குத் தகுந்தவாறு மாற்றாமல் இருந்தால் மைலேஜ் பாதிக்கும். சிக்னலில் இருந்து வண்டியை எடுக்கும் போது எத்தனை பேரின் காரில் இருந்து எஞ்சின் சத்தம் வருகிறது என்று கவனித்தால் இந்த உண்மை உங்களுக்கு தெரிய வரும். பெரும்பாலானோர் காரை சாலையில் நிறுத்தும் போது முதல், இரண்டாவது கியருக்குக் கொண்டு வருவதில்லை. டாப் கியரிலேயே வண்டியை எடுக்கும்போதுதான் எஞ்சினில் இருந்து இரையும் சத்தம் வருகிறது. இந்த விஷயத்தை கார் ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. 30 விநாடிகளுக்கு மேல் சாலையில் காரை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது, வாகனத்தை ஆஃப் செய்வது அவசியம். தேவையில்லாமல் எரிபொருள் செலவிடப்படுவதும் மைலேஜ் குறையக் காரணம்.

5. ஏ.சி அதிகமாகப் பயன்படுத்தாமல் இருந்தாலே கேஸ் மற்றும் எரிபொருள் சேமிக்கப்படும். நம்மில் பலர் தேவையின்றி தொடர்ந்து ஏ.சியை ஆன் செய்துவிட்டு காரை ஓட்டுகின்றனர். ஆட்டோ மோட் ஆப்ஷனில் வைத்துக் கொண்டால், கார் கேபினின் வெப்ப நிலை மாற்றமடைந்தவுடன், அது தானாகவே அணைந்து விடும். எனவே, ஏ.சியை பயன்படுத்தும் போதெல்லாம் இந்த விஷயம் உங்களுக்கு நியாபகம் இருக்கட்டும்.

6. டயர்களில் உள்ள காற்றின் அழுத்தம் மற்றும் டயரின் தன்மை ஆகியவற்றைப் பொருத்தும் மைலேஜ் வேறுபடும். ஆகவே, டயர்களில் உள்ள காற்றின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

7. முறையான பராமரிப்பு மிக முக்கியமான ஒன்று. எரிபொருள் பில்டர்கள், ஸ்பார்க் பிளக், ஆக்சிஜன் சென்ஸார், மாசுக் கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் கார்களை விடுவது நல்லது.

8. அதிக லக்கேஜ்களுடன் கார்களை இயக்கினாலும் அது எரிபொருள் செலவை அதிகப்படுத்தும். எனவே, காரினுள் நீண்ட நாள்களாக இருக்கும் தேவையற்ற லக்கேஜ்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.

9. குளிர் நேரத்தில் எரிபொருளின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே, அதிகாலையில் எழுந்து காருக்கு எரிபொருள் நிரப்புவதுதான் சமயோஜிதம். அப்போதுதான் நீங்கள் தரும் பணத்துக்கு சரியான அளவோ அல்லது அதைவிட சற்றுக் கூடுதலாகவோ எரிபொருள் கிடைக்கக்கூடும். பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பிய பிறகு டேங்க் மூடிகளை சரிவர மூடுகிறார்களா என்று பரிசோதிப்பது அவசியம். அப்படி மூடாமல் விட்டு விட்டால், எரிபொருள் காற்றில் ஆவியாகிவிட வாய்ப்புள்ளது.

10. திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள். மளிகைக் கடை, ஷாப்பிங் மால், மெடிக்கல் ஷாப் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரே நேரத்தில் அந்தப் பயணத்தை நிறைவு செய்யுங்கள். டிராஃபிக் குறைந்த இடத்தைக் கண்டறியவும், போகும் வழியிலேயே அனைத்து வேலைகளையும் முடித்துக் கொள்ளவும் ஜிபிஎஸ் மேப்பைப் பயன்படுத்தி எரிபொருளை சேமிக்கலாம்.

11. கார் நிறுவனம் பரிந்துரைத்த ஆயில்களையும், எரிபொருள்களையுமே எப்போதும் பயன்படுத்துங்கள். காசை மிச்சப்படுத்துவதாக நினைத்து மலிவான எஞ்சின் ஆயில்களையோ, எரிபொருளையோ பயன்படுத்த வேண்டாம். மாறாக அதனால் உங்களுக்கு கூடுதல் செலவுதான் ஏற்படும்.

12. ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்களைப் பயன்படுத்தும்போது அதனால் அதிக எரிபொருள் செலவு ஏற்படும். நெரிசலான பகுதிகளிலும், முதல் கியரில் செல்ல வேண்டிய இடங்களிலும் கூட அவை அதிக டார்க்கை வெளிப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும். எனவே, கூடுமான வரை மேனுவல் கியர் ஆப்ஷனைப் பயன்படுத்தி நீங்களை காரை ஓட்டிச் செல்லுங்கள்.

13. சாவகாசமாக செல்லும்போது பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்களைப் பின்தொடர்ந்து செல்வது நமக்கு மிகவும் சௌகரியமான ஒன்று. சாலையின் பாதையை சரியாகக் கடக்கவும், டிராஃபிக்கில் கூட ஸ்மூத்தாக டிரைவ் செய்யவும் இது உதவும். ஆனால், எல்லா நேரத்திலும் இந்த ஆலோசனை கை கொடுக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

14. காரை ஆன் செய்வதற்கு முன்பாகவே சன் கிளாஸை சரி செய்வது, சீட் பெல்ட் அணிவது, கதவுகளை முறையாக லாக் செய்வது என அனைத்து விஷயங்களையும் மேற்கொண்டு விடுங்கள். கார் எஞ்சினை ஆன் செய்த பிறகு, இந்த செயல்களை செய்தால் எரிபொருள் வீணாகும்.

15. வாகனத்தை வீட்டில் நிறுத்தும்போது ரிவர்ஸ் பார்க் செய்து விடுங்கள். அதாவது அடுத்த முறை வண்டியை எடுத்த ஏதுவாக திருப்பி நிறுத்தி விடுங்கள். இதன் மூலம் அடுத்த நாள் காரை எடுக்கும்போது அதை திருப்புவதற்காக தேவையில்லாமல் செலவு செய்யப்படும் எரிபொருளை சேமிக்க முடியும்.

இந்த வழிகளைப் பின்பற்றி உங்கள் காரின் மைலேஜை அதிகரியுங்கள். எரிபொருள் சிக்கனம் என்பது உங்கள் வீட்டுக்கு மட்டும் நீங்கள் செய்யும் உதவியல்ல... இந்த நாட்டுக்கும்தான்...Post Comment

Post Comment