திருப்பம் தரும் திருவதிகை ஈசன் வழிபாடு ;


Posted by-Kalki Teamசென்னை-கும்பகோணம் சாலையில் உள்ள பண்ருட்டியிலிருந்து கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது கோயில். புராதன சிறப்பு கொண்ட பழமையான கோயில். கோயிலுக்கு முன்னால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. நம் தமிழகத்தில் மிகப்பெரிய பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் மூலவர் வீரட்டேஸ்வரர். வீரட்ட நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பதினாறு பட்டைகளுடன் கூடிய பெரிய லிங்கத் திருமேனியுடன் கிழக்கு நோக்கிய சந்நதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் இறைவன். சிவலிங்கத்திற்குப் பின்புறத்தில் சுவாமி-அம்பாள் உருவங்கள் உள்ளன. இக்கோயிலின் அம்பாள் திரிபுரசுந்தரி. வீரட்டேஸ்வரர் சந்நதிக்கு தென்புறத்தில் கிழக்கு நோக்கி தனி சந்நதியில் நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். இக்கோயில் தலமரம் சரக்கொன்றையாகும்.

சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று திரிபுரத்தை சம்காரம் செய்த தலம். இங்குதான் திருநாவுக்கரசர் அவதரித்தார். திருநாவுக்கரசரின் தமைக்கையாரான திலகவதியார் இந்த ஊரில் தங்கியிருந்து இந்த இறைவனுக்குத் தொண்டு புரிந்திருக்கிறார். சுந்தரர், இறைவனின் திருவடி தீட்சை பெற்றதும் இங்குதான். திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற ஆன்மிகச் செறிவு மிகுந்த தலம். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் தங்கம், வெள்ளி, இரும்பு கோட்டைகளாக மாறி, தாங்கள் நினைத்த இடத்துக்குப் பறந்து சென்று நாடு நகரங்களை அழித்து வந்தனர்.

இவர்களை வேறு எவராலும் அழிக்க முடியாததால், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் முன்வந்து அரக்கர்களுடன் போரிட்டு அவர்களை அழிப்பதென முடிவு செய்தார். பூமியைத் தேராகவும், சந்திரனும் சூரியனும் தேரின் இரண்டு சக்கரங்களாகவும் மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலை அம்பாகவும், நான்முகனைத் தேரோட்டியாகவும் கொண்டு சிவபெருமான் போருக்குப் புறப்பட்டார்.

ஆனால், சிவபெருமான் அடையப்போகும் வெற்றி, தாங்கள் அவரிடம் கோரியதால்தான், இந்த வதத்துக்கு மூலகாரணம் தாங்கள்தான் என்று தேவர்கள் கர்வம் கொண்டனர். இதனை உணர்ந்த சிவபெருமான் புன்னகையுடன் தேர்த்தட்டில் கால் வைக்க அதன் அச்சு முறிந்தது. உடனே தேவர்கள் பதறிப்போய் தம் கர்வத்தை விட்டு ஈசனிடம் சரணடைய, தன்னுடைய சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் அழித்தார்.

அத்தகைய புராண வரலாறு கொண்ட அற்புதத் திருத்தலம் திருவதிகை. இந்த ஈசனை தரிசித்தாலேயே நம் மனதில் மண்டிக்கிடக்கும் தீய எண்ணங்கள் எல்லாம் சாம்பலாகி நாம் புதுப் பொலிவுடன் விளங்குவோம் என்பது அன்றிலிருந்து தொடர்ந்து வரும் நம்பிக்கை. வீரட்டானரை தரிசித்துத் திரும்பினால் வாழ்க்கையிலும் நல் திருப்பம் உண்டாகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. -Post Comment

Post Comment