குற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம் :


Posted by-Kalki Teamநெல்லை: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.

இயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.

குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்தாண்டு சாரல் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்குகிறார்.சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் கலந்து கொண்டு சாரல் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முதன்மைச் செயலர் ராமச்சந்திரன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுச் சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.

3ஆம் நாள் விழாவில், வடிநிலக் கோட்டம் சார்பில் படகு போட்டி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சியும், 4ஆம் நாள் விழாவில் யோகா, மினி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

5ஆம் நாள் விழாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டியும், 5ஆம் தேதி ஆணழகன் போட்டியும் நடைபெறும். 8ஆது நாளான ஆக.6ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.


Post Comment

Post Comment