கபாலி... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன டிக்கெட்டுகள்!


Posted by-Kalki Teamசென்னை: ரஜினியின் கபாலி படத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. முதல் நாளுக்கு முந்தைய பிரிமியர் காட்சி டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்த நிலையில், அடுத்த நாட்களின் டிக்கெட்டுகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் எப்போது கபாலி படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். நேற்று சென்னையின் பிரபல எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் கபாலி படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியது.

தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்து டிக்கெட்டுகளும் ஹவுஸ் புல்லாகிவிட்டன. குறிப்பாக விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அந்த இணையதளமே ஸ்தம்பித்துவிட்டது.

கபாலி படம் உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. இதுவரை எந்த படமும் இல்லாத அளவுக்கு கபாலி படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

படத்தின் டிக்கெட் விற்பனை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக திருட்டு வீடியோ இல்லாத சூழலில் படம் வெளியாகும் நிலை உருவாகியிருப்பது அவரை இன்னும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Post Comment

Post Comment