குண்டாறு நீர்த்தேக்கத்தில் படகு போக்குவரத்து தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் :


Posted by-Kalki Teamநெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான குண்டாறு நீர்த்தேக்கத்தில் படகு போக்குவரத்து துவங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது கண்ணுபுளிமெட்டு குண்டாறு நீர்த்தேக்கம். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது.

இதமான சாரலுடன், குளிர்ந்த தென்றல் காற்றும் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் தமிழக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டாறு பகுதிக்கு வந்து செல்வர்.

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். குற்றாலம் சீசன் துவங்கி விட்டால் அடுத்து தமிழக கேரள மாநிலங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

36.6 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்கத்தில் தற்போது 30 அடி நீர் இருப்பு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் படகு பயணத்திற்காக இந்த பகுதிக்கும் ஆர்வமாக வந்து செல்கின்றனர்.

ஒரு முறை படகு சவாரி செய்வதற்கு பெரியவர்களுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment