கமலுடன் நடிக்க பிரம்மானந்தம் ஆர்வம்


Posted by-Kalki Teamதெலுங்குத் திரையுலகின் கவுண்டமணி.... இல்லையில்லை.... அவரை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சொல்லலாம். ஏனென்றால் கவுண்டமணியாவது இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டார். அவரையும் மிஞ்சும் அளவிற்கு தெலுங்குத் திரையுலகின் நகைச்சுவை மன்னனாக இருப்பவர் பிரம்மானந்தம். இன்றும் இளம், வளரும் நடிகர்கள் தங்களது படங்களில் பிரம்மானந்தத்தின் நகைச்சுவையை வைத்துக் கொண்டு தப்பித்து வருகிறார்கள்.தமிழில் மொழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் தெரிந்த நடிகரான பிரம்மானந்தம் அதன் பின் அடிக்கடி தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனுடன் முதன் முறையாக சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஆரம்பமாக உள்ளது. படம் முழுவதும் கமல்ஹாசனுடன் இருக்கும்படியான முக்கியமான கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக பிரம்மானந்தம் கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே சமயத்தில் இந்தப் படத்தை கமல்ஹாசன் எடுக்க இருப்பதால் தமிழுக்கும், தெலுங்குக்கும் பொருத்தமாக பிரம்மானந்தம் இருப்பார் என அவரைத் தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.


Post Comment

Post Comment