வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - கீர்த்தி சுரேஷ்


Posted by-Kalki Teamசில ஹீரோயின்களுக்கு மட்டும் தான், வந்த உடனே வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து, பெரிய பட்ஜெட் படங்கள் அமைந்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம், கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. அழகான புன்னகை, மலையாளம் கலந்த கொஞ்சு தமிழ் என, வசீகரிக்கிறார் கீர்த்தி. அவருடன் ஒரு சந்திப்பு:* நடித்து வெளிவந்த படம் 2 தான், அதற்குள் பல படங்கள் எப்படி.? என்ன மேஜிக் அது.?எனக்கும் அது நிஜமாகவே தெரியவில்லை, எல்லாம் கடவுள் செயல். ஒவ்வொரு கதைக்கும் வித்யாசம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நேற்று என்ன நடந்தது, நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்க மாட்டேன். இன்றைக்கு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்ய நினைப்பேன்.* ரஜினி முருகன் உங்களை உச்சத்துக் கொண்டு போய் விட்டதே? உண்மைதான்; படம் எடுக்கும்போது, வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த அளவுக்கு கொண்டாடுவாங்கன்னு தெரியாது; இது, என் கேரியரில் மிக முக்கியமான படம். * உம் மேலே ஒரு கண்ணு... என்ற பாடலில், ஊதா கலர் ரிப்பனையே மறக்கடிச்சிட்டீங்களே? இது சம்பந்தமாக, உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன. சமீபத்தில், கேரளாவில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு, வேதிகா என்ற, 4 வயது குழந்தை இருந்தது. அந்த குழந்தை, ரஜினி முருகன் படப் பாடலை பார்த்து விட்டுத் தான் துாங்குமாம். அந்த பாடலில், நான் எப்படி கண் அடிப்பேன். எப்படி சிரிப்பேன் என, ஒவ்வொரு விஷயத்தையும், அப்படியே செய்து காட்டுகிறாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. * தனுஷ், விஜய் என, பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி...?என்னைப் பற்றி, நானே பெரிதாக தம்பட்டம் அடிக்க முடியாது. இந்த வாய்ப்புகள் அனைத்தையும், கடவுள் கொடுத்ததாகவே நினைக்கிறேன். மலேஷியாவில் தான், பிரபு சாலமன் என்னை சந்தித்தார். தொடரி படத்தில் நடிக்க முடியுமா என கேட்டார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பு முடிந்து விட்டது. கண்டிப்பாக, படம் வெற்றியடையும். * விஜய் கூட, எப்போ நடிக்கப் போறீங்க? அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. நான் நடிக்கும் காட்சிகள் இனிமேல் தான் படமாக்கப் போறாங்க. * உங்க அம்மா மேனகாவிடம் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும், டீ கொடுக்கிற பையனில் இருந்து, இயக்குனர் வரை, அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், அம்மா சொல்லியிருக்காங்க. அதை, கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கிறேன். * எந்தமாதிரி கதையை தேர்வு செய்வீர்கள்.?ஆரம்பத்தில் அம்மா தான் கதையை கேட்டு முடிவு பண்ணுவாங்க, பின்னர் அம்மா வித்தியாசம் வேண்டும் என்று சொல்வாங்க, அதையடுத்து நானும், அவரும் கதை கேட்க ஆரம்பித்தோம். இப்போது நானே கதைகேட்டு அம்மாவிடம் சொல்வேன், உனக்கு பிடிச்திருந்தால் நடி என்று சொல்வாங்க. * நிறைய ஹீரோயின்கள் பாட ஆரம்பிச்சிட்டாங்களே; நீங்க எப்போது பாடப் போறீங்க? எனக்கு தெரிந்த வேலையை மட்டும் தான் செய்வேன். ஆனால், ஆர்வக்கோளாறில், இசையமைப்பாளர் இமானிடம், பாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என கேட்டேன். அவர், பார்க்கலாம் என சொல்லியிருக்கிறார். * கேரளத்து மருமகள், தமிழகத்துக்கு மருமகள், இந்த இரண்டில் உங்களுக்கு எந்த மருமகளாக ஆசை? என்னோட அப்பா, மலையாளம்; அம்மா, தமிழ். இந்த விஷயத்தில் எப்படி முடிவு எடுப்பது என தெரியவில்லை. மலையாளம், நான் வளர்ந்த இடம். தமிழகம், வந்தாரை வாழவைக்கும் இடம். இப்போதைக்கு, இந்த இரண்டு மாநிலங்களின் எல்லையில் தான் இருக்கிறேன். * சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்திட்டீங்களாமே?அப்படி எல்லாம் இல்லை. அடுத்த படத்தில் நடிக்க சம்மதிக்கும்போது, கடைசியாக ரிலீஸ் ஆன படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினேனோ, அதை விட குறைவாக வாங்க மாட்டேன். அதேநேரத்தில், ரொம்பவும் அதிகமாகவும் வாங்க மாட்டேன். தயாரிப்பாளருக்கும், எனக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான ஒரு தொகையை, சம்பளமாக வாங்குகிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்.* ஷூட்டிங் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்.?முடிந்தவரை நல்லா தூங்குவேன். கேரளாவை விட சென்னையில் தான் எனக்கு நண்பர்கள் அதிகம். அதனால் அவர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவேன். முன்பேல்லாம் தனியாக படம் பார்க்க போவேன், ஆனால் இப்போது அப்படி முடியவில்லை. ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுவிடுகிறார்கள். கூட்டமாக வந்து எல்லோரும் கை கொடுத்து செல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னும் நான் நிறைய நிலைகளை அடைய வேண்டும்.இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.


Post Comment

Post Comment