விண்ணை முட்டும் சீனாவின் பிரம்மாண்ட தொங்கு பாலம்: மே 1ல் திறப்பு!


Posted by-Kalki Teamஆசியாவின் மிக பிரம்மாண்டமான தொங்கு பாலம் சீனாவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் மே1ல் இந்த புதிய பாலம் திறப்பு விழா காண இருக்கிறது.

லாங்ஜியாங் கிராண்ட் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் இந்த புதிய உலக அதிசயத்தை ஆளில்லா குட்டி விமானம் மூலமாக சமீபத்தில் படம் பிடித்து வெளியிட்டு இருக்கின்றனர். மனதை கொள்ளை கொள்ளும் இந்த பாலத்தின் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

அமைவிடம் :

மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் இந்த புதிய ரோப் பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இரும்பு கம்பிகள் திரிக்கப்பட்ட வலிமையான வடங்களில் தொங்குவது போன்று இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

நீளம் :

இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே இந்த தொங்கு பாலம் 2.4 கிமீ நீளம் கொண்டது. உலகின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இணைப்பு பாலம் :

மேற்கு சீனாவிலுள்ள பவோசந்த் மற்றும் டெங்சாங் ஆகிய இரு நகரங்களையும் இந்த தொங்கு பாலம் இணைக்கும்.

மதிப்பீடு :

இந்த தொங்கு பாலம் இந்திய மதிப்பில் 14.46 பில்லியன் செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. உலகின் அதிக திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலங்களில் ஒன்றாக கூறலாம்.

உயரம் :

லாங்ஜியாங் ஆற்றின் மேலே 274 மீட்டர் உயரத்தில் இந்த தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து கால் கிலோமீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது.

அடேங்கப்பா :

இரு மலை முகடுகளிலும் அமைக்கப்பட்ட இரண்டு இரும்பு கோபுரங்கள்தான் இந்த தொங்கு பாலத்தை இரும்பு வடங்கள் மூலமாக தாங்கி நிற்கிறது. இந்த இரு கோபுரங்களுக்கு இடையில் 1.1 கிமீ தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மற்றொரு பாலம் :

ஜப்பானில் கோபே மற்றும் அவாஜி தீவு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் அகாஷி கெய்கியோ பாலத்தின் கோபுரங்களுக்கு இடையிலான தூரம் 1.99 கிமீ என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த தொங்கு பாலத்தின் மொத்த நீளம் 3.99 கிமீ ஆகும். ஆனால், எங்களது லாங்ஜியாங் பாலம்தான் உயரமானது, நீளமானது என்று சீனா மார்தட்டுகிறது.

மிக நீளமான பாலம் :

அதேநேரத்தில் உலகின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பீஜிங்- சாங்காய் இடையில் புல்லட் ரயிலுக்காக அமைக்கப்பட்ட பாலம்தான் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பீஜிங்- சாங்காய் இடையிலான 1,305 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதையில், இந்த பாலம் டங்யாங்- குன்சான் இடையில் 164.8 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இது 535 பில்லியன் மதிப்பில் கட்டப்பட்டது. பீஜிங் - ஷாங்காய் இடையிலான தூரத்தை புல்லட் ரயில்கள் 4 மணி 48 நிமிடங்களில் கடப்பது குறிப்பிடத்தக்கது.

உயரமான தொங்கு பாலம் :

உலகிலேயே உயரமான தொங்கு பாலம் சீனாவின் சிது ஆற்றின் மேலே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து 500 மீட்டர் உயரத்தில், அதாவது அரை கிலோமீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டது.

மேலும், இந்த பாலத்திற்கான முதன்மை கம்பி வடங்கள், ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு ராக்கெட்டுகளை பயன்படுத்தி இணைக்கப்பட்டது. இந்த பகுதியில் ஹெலிகாப்டர் மற்றும் படகுகளை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டதால், ராக்கெட்டுகளை பயன்படுத்தினர்.

கண்ணாடி பாலம் :

படத்தில் பார்க்கும் கண்ணாடி பாலம்தான் உலகிலேயே அதி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி தொங்கு பாலம்.

சீனாவில்தான் :

இந்த கண்ணாடி தொங்கு பாலமும் சீனாவில்தான் உள்ளது. சான்ஜியாஜி கிராண்ட் கேன்யோன் பகுதியில் இந்த பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. 430 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டது. தப்பி தவறி, கீழே பார்த்தால் தலைசுற்றல் நிச்சயம்.Post Comment

Post Comment