1981-ல் சப்தமின்றி நடந்த புரட்சி அது. தமிழகத்தில் பெண்கள் பத்திரிகைகள் அதிகமாக இல்லாதிருந்த அந்தக் காலகட்டத்தில், சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை ‘கல்கி’ குழுமம் எடுத்து நடத்த முடிவு செய்தது. மங்கையரின் மனங்கவர்ந்த மலராக மணம் வீச ஆரம்பித்தது மங்கையர் மலர். அப்போது கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்தார் ‘கல்கி’ ராஜேந்திரன்.

ஆரம்பத்தில் சில ஆயிரம் பிரதிகளே விற்பனையாகிக் கொண்டிருந்த மங்கையர் மலர், காலப்போக்கில் இரண்டு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையைத் தொட்டது. இருபத்து நான்கரை ஆண்டுகள் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து திறம்பட நடத்தினார் மஞ்சுளா ரமேஷ். அவரது அயராத உழைப்பால் பெண்கள் பத்திரிகை உலகின் முன்னோடியாக மிளிர்ந்தது மங்கையர் மலர். அப்போதைய கல்கி குழும இயக்குநர் முரளியின் நிர்வாக ஆளுமையும், விற்பனை மேலாளர் சந்திரமௌலியின் தீவிர உழைப்பும் வித்தாக இருந்ததில், மங்கையர் மலர் பெரியதொரு ஆலமரம்போல் விரிந்து, பத்திரிகை உலகில் உறுதியான இடத்தைப் பிடித்து தடம்பதித்தது.

மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ஆசிரியர் பொறுப்பேற்ற ரேவதி சங்கரன் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலம் மங்கையர் மலரின் வெள்ளி விழா தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்து வருகிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும், ‘கல்கி’ ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன். இவரது தலைமையின் கீழ், மங்கையர் மலர், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன், தரத்துடன் கூடிய தனித்துவம் வாய்ந்த பெண்கள் பத்திரிகையாக, கம்பீரமாக வெற்றிநடைபோட்டு வருகிறது.

வாசகர்களை படைப்பாளர்காக உயர்த்தி, 2013 பிப்ரவரி முதல், புதுப்பொலிவுடன், புதிய வடிவத்தில், உருமாறியது மங்கையர் மலர். 2013 செப்டெம்பர் முதல் ‘மாதம் இருமுறை’ இதழாக மலர்ந்தது. 2015 முதல் தற்போது வரை (2020) எஸ். மீனாட்சி, பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார்.

தமிழகம் முழுவதிலும், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும்கூட வாசகர் சந்திப்புகளை நடத்தி, அவர்களின் தேவைக் கேற்ற செய்திகளையும், கதை, கட்டுரைகளையும் வழங்கி அழகான ஆளுமையுடன் மங்கையரை வழி நடத்தி வருகிறது மங்கையர் மலர். பிப்ரவரி 2020 ல் தனது 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மங்கையர் மலர், காலங்களைக் கடந்து யாதுமாகி நிற்பாள் என்பது உறுதி.